2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி கிளிநொச்சி கடைக்காடு கடற்கரை பகுதியிலும் அதற்கு அப்பால் உள்ள கடற்பகுதியிலும் மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது (09) பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்த ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்படி உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து இக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமையவே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி, முள்ளியான், விஸ்வமடு, மன்னார், பேதுருதுடுவ, தெல்லிப்பளை மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் 23 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை, மேலதிக சட்ட நடவடிகடகைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.