கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க போலீஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை. எனவே வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவுபணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் அவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்ததன்னார்வலர் சஞ்சய் ராய் (33)என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் மருத்துவரின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 5 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி சிவஞானம்,நீதிபதி ஹிரண்மயி பட்டாச்சார்யா அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் பட்டாச்சார்யா கூறும்போது, ‘‘சிட்பண்ட் முறைகேடு வழக்கில் அப்போதைய காவல்ஆணையரே முக்கிய ஆதாரங்களை அழித்தார். பெண் மருத்துவர் விவகாரத்திலும் ஆதாரங்களை அழிக்க போலீஸார் முயற்சி செய்யக்கூடும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’’ என்று வாதிட்டார்.
மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெரோஸ் கூறும்போது. ‘‘பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீஸார் வெளிப்படைத்தன்மை, நேர்மையுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
தடயங்களை அழிக்க வாய்ப்பு: இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சிவஞானம் கூறும்போது, ‘‘மேற்குவங்க போலீஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை. கொலை நடந்து 5 நாட்கள் ஆகியும் போலீஸாரால் முழுமையான விவரங்களை வழங்க முடியவில்லை. வழக்கின் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.
இதற்கிடையே, கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளுறை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வழிநடத்தும் போராட்டத்தில் மூத்த மருத்துவர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். அவசர சிகிச்சை அளிக்கும் பணியில் மட்டுமே மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
நாடு முழுவதும் போராட்டம்: டெல்லியில் எய்ம்ஸ், ஆர்எம்எல் மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் போராட்டத்தில் இணைந்திருப்பதால் கடந்த 2 நாட்களாக டெல்லியிலும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு ஸ்தம்பித்துள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பை, நாக்பூரில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் சுமார்200 இளம் மருத்துவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங்அரசு மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவர்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இங்கும் அவசர சிகிச்சை தவிர்த்துமற்ற மருத்துவ சேவைகள் முடங்கியுள்ளன. மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.