தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா: குஷ்பு அறிவிப்பு

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “அரசியலில் 14 ஆண்டுகால அர்ப்பணிப்புக்கு பிறகு, இன்று ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். நமது உயர்ந்த கட்சியான பாஜகவில் முழுமையாக சேவை செய்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பாஜக உடன்தான் இருக்கும். இப்போது, நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன்.

தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இப்போது நான் சுதந்திரமாக முழுமனதுடன் சேவையாற்ற முடியும். நாளை காலை, சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். தீவிர அரசியலிலிருந்து என்னுடைய இந்த இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எனது தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது.

வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக உறங்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக தூண்டப்பட்டது” இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.