விஜய் கட்சி மாநாட்டுக்கு இடம் தர விடாமல் மிரட்டலா?

சென்னை: நடிகர் விஜய் கட்சி மாநாட்டுக்கு இடம் தர விடாமல் மிரட்டல் வருதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து பல்வேறு பணிகளை விஜய் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை விஜய் செய்து வருகிறார். அதற்கான வேலைகளை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த்போல கட்சி தொடங்கியதும், தனது முதல் அரசியல் மாநாட்டை செப்டம்பர் மாதம் இறுதியில் மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டிருந்தாக கூறப்பட்டது. ஆனால், முதல் மாநாடு திருச்சியில் நடைபெற இருப்பதாக திடீரென தகவல் வெளியானது. திருச்சியில் ரயில்வேக்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்தில் நடத்துவதற்காக, ரயில்வே அதிகாரிகளிடம் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார். அதில்,மாநாட்டில் எவ்வளவு பேர்பங்கேற்பார்கள், எவ்வளவு வாகனங்கள் வரும் என்பது குறித்து பல்வேறு தகவல்களை அவர் அதில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால், அவ்வளவு பேரும் ஒரே நேரத்தில் ஜி கார்னர் மைதானத்தில் கூடுவது சிரமம்.பார்க்கிங் வசதிக்கும் சிக்கல் ஏற்படும் என்று அதிகாரிகள் புஸ்ஸி ஆனந்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சேலம், ஈரோடு, கோவை என பல இடங்களில் மாநாட்டுக்கான இடத்தை புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தார். இறுதியாக தற்போது, விக்கிரவாண்டியில், சென்னை – திருச்சி தேசிய நெடுசாலை அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தின் அருகில் மாநாடு நடத்துவதற்கான பல ஏக்கர் நிலம் கொண்ட காலி இடத்தை புஸ்ஸி ஆனந்த் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இடத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆனாலும் விக்கிரவாண்டியில்தான் மாநாடு நடக்க போகிறது என அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை கட்சி தலைமையிடம் இருந்து வரவில்லை.

மாநாட்டை நடத்துவதற்கு தொடக்கத்தில் இருந்தே நடிகர் விஜய்க்கு சிக்கல் எழுந்திருக்கிறது. முதலில், திருப்தி அளிக்கும்வகையில் இடம் அமையவில்லை என கூறப்படுகிறது. அதன்பிறகு, அமைந்த இடங்களையும் பல்வேறு காரணங்களை சொல்லி நில உரிமையாளர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதன் பின்னணியில் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலையீடு இருப்பதாக விஜய் கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். மாநாட்டுக்கு இடம் கொடுத்தால், பல்வேறுவகைகளில் தங்களுக்கு நெருக்கடி வரும் என நில உரிமையாளர்கள் அஞ்சுவதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் நிலம் தர மறுப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். ஆனாலும், 10 லட்சம் பேர் வரை பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி முடிப்பதில் நடிகர் விஜய் உறுதியாக இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.