Thangalaan: சூர்யா, தனுஷ், சீமான்….'தங்கலான்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட திரைப்பட்டாளங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று திரைக்காணும் இப்படத்திற்கு சூர்யா, தனுஷ், நடிகர் ஆர்யா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, உள்ளிட்டோர் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷ், “தங்கலான் படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள். படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம் சார் எப்போதும்போல கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படம் பெரியளவில் வெற்றி பெற வேண்டும். ஓம் நமச்சிவாய” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களுக்கும், பறிக்கப்பட்ட அவர்களது உரிமை மீட்புக்கும், நல்வாழ்விற்கும் என தனது ஒப்பற்ற கலைத்திறனை அர்ப்பணித்துள்ள அன்புத்தம்பி பா.ரஞ்சித் அவர்களுக்கும், நடிப்புக்கலையில் தான் கொண்டுள்ள அளவற்ற காதலாலும், தனித்திறனாலும் தான் ஏற்ற பாத்திரத்திற்கும், கதைக்களத்திற்கும் ஏற்ப தனது உடலை வருத்தி, திருத்தி வெளிப்படுத்தியுள்ள அசாத்திய நடிப்பாற்றலால் காட்சிகளில் நம்மை ஒன்றச் செய்துள்ள பெருங்கலைஞன் அன்புத்தம்பி விக்ரம் அவர்களுக்கும்,

வரலாற்றுப்பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மண் மனம் மாறாத மக்களிசையாலும், வீரம் தெறிக்கும் போர்ப்பறையிசையாலும் காட்சிகளுக்கு வலிமைசேர்த்துள்ள என் ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும், குருதி தோய்ந்த தங்கச்சுரங்கங்களில் மறைக்கப்பட்ட வரலாற்றை உணர்வுச்சூடேற்றும் திரைக்கதை மற்றும் உரையாடல்களாக வார்த்துள்ள அன்பிற்கினிய எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், தமிழ் பிரபா ஆகியோருக்கும், வரலாற்றுக்காலத்தை அதன் விழுமியங்களோடு கண் முன்னே கொண்டு வந்துள்ள கலைஇயக்குநர் தம்பி மூர்த்தி அவர்களுக்கும், அதனை உலகத்தரத்தில் ஒளிஓவியமாக வடித்துள்ள ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி கிஷோர்குமார் அவர்களுக்கும்,

தங்கலான்

படத்தொகுப்பாளர் தம்பி செல்வா அவர்களுக்கும், தங்கலான் திரைப்படத்திற்கு கடின உழைப்பையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள அனைத்து திரைக்கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்எனது அன்பும், பாராட்டுகளும். வருகின்ற 15-08-2024 அன்று வெளியாகவிருக்கும் தங்கலான் திரைப்படத்தை உலகெங்கும் பரவிவாழும் என் உயிர்க்கினிய அன்னைத்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் திரையரங்கங்களுக்குச் சென்று கண்டு களித்து, மாபெரும் வெற்றியடையச் செய்து, மேலும் இதுபோன்ற ஆகச்சிறந்த படைப்புகள் தமிழில் உருவாகத் துணை நிற்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நடிகை கீர்த்தி சுரேஷ் “ஒரு காலத்தில் அன்னியன் போஸ்டர்கள் என் படிப்பு மேஜையில் இருந்திருக்கிறது. தற்போது விக்ரம் சாருடன் இணைந்து என் படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதனை என் பாக்கியமாக உணர்கிறேன். வாழ்த்துக்கள் சியான் சார்” என்று படம் வெற்றி பெற ஒட்டு மொத்த படக்குழுவிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார். மேலும் ” ‘ரகு தாத்தா’ படமும் வெற்றியை அடைய என்னுடைய படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் கார்த்தி , ” சொல்லப்படாத கதையை வெளிக்கொணர அவர்கள் பட்ட அந்த கஷ்டமும், நேர்மையும் தங்கலானுக்கு மாபெரும் வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றுத் தரட்டும். வாழ்த்துக்கள் அன்பே சியான் சார்” என்று படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

“லானே தங்கலானே வெல்கவே நீ ஆதியோனே வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா. சியான் சாரின் பெரும் உழைப்பின் வழி பெரும் வெற்றிக்கு தயாராகும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும்” என்று ஜீவி பிரகாஷையும், தயாரிப்பு நிறுவனத்தையும் குறிப்பிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.