சென்னை: இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கட்டிடக்கலையை கருப்பொருளாக வைத்து இந்த டூடுல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கார்ட்டூன் கலைஞர் விருந்தா ஜவேரி உருவாக்கியுள்ளார்.
தொழில்நுட்ப உலகின் சாம்ராட்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு டூடூலை வெளியிட்டுள்ளது.
இந்த டூடுல் குறித்து கூகுள் கொடுத்துள்ள விளக்கம்: இன்றைய டூடுலை விருந்தா ஜவேரி வடிவமைத்தார். இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 1947-ம் ஆண்டு இதே நாளில், இந்தியா, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
இதன் மூலம் சமத்துவமின்மை, வன்முறை மற்றும் அடிப்படை உரிமைகள் இல்லாமைக்கு இந்திய மக்கள் விடுதலை பெற்றனர். காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆளுமைகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினர். சுதந்திரம் வேண்டி போராடிய விடுதலை போராட்ட வீரர்களின் விடாமுயற்சியும், தியாகமும் பலனளித்தன.
சுதந்திர தினத்தன்று, கொடியேற்றும் விழாக்கள், அணிவகுப்புகள், இசை நிகழ்ச்சிகள், பேரணிகள் என கொண்டாடப்படுகிறது. வீடுகள், அலுவலகங்கள் என பல இடங்களில் மூவர்ண தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. தேசிய கீதம் பாடப்படுகிறது. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்தியா! என கூகுள் தெரிவித்துள்ளது. இந்த டூடுல் இந்தியாவில் மட்டும் வியூ ஆகும் வகையில் வெளியாகி உள்ளது.