புதுடெல்லி: நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி – செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், வளர்ந்த பாரதம் தொடங்கி ஒரே நாடு ஒரு தேர்தல் வரை பல்வேறு அம்சங்களை முன்வைத்து உரையாற்றினார். அதன் ஹைலைட்ஸ்:
“தேசத்தின் விடுதலைக்காக தங்களது உயிரை துறந்தவர்களுக்கு இந்நேரத்தில் வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்த நாடு அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ‘வளர்ந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. இதற்காக பலதரப்பட்ட மக்கள் உழைத்து வருகின்றனர். அன்று 40 கோடி மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றினார். தற்போதுள்ள 140 கோடி பேர் தேசத்தை வல்லரசு ஆக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் நமது கவலை அதிகரித்துள்ளது. இருந்த போதும் நாம் அதிலிருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசம் துணை நிற்கும். மற்ற ஜி20 நாடுகளை விடவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்து இந்தியா அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதில் விண்வெளித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதை கருத்தில் கொண்டு விண்வெளித் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம்.
உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை இந்தியா விரைவில் அடையும். 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த வேண்டுமென்பது நமது கனா. இந்த நேரத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நம் வீரர், வீராங்கனைகளை வாழ்த்துகிறேன். ‘வளர்ந்த பாரதம் 2047’ இலக்கை அடைய நாம் 24×7 உழைக்க வேண்டும். சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை அளிக்கிறது. அது தொடர்பாக விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். மேலும் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். அண்டை நாடுகளில் அமைதியை உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்வி பயில்வதற்கான இடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டிய அவசியம் இருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதில் பெரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடிக்கடி நடத்தப்படும் தேர்தல் காரணமாக தேசத்தின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகின்றன. அதை கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை அரசியல் கட்சிகள் ஆதரிக்க வேண்டும்” என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.