“பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களுக்கான தண்டனை…” – பிரதமர் மோடி உரையில் ‘தீவிரம்’

புதுடெல்லி: “நாட்டில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்கள் வேதனை தருகிறது. தாய்மார்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாம் அனைவரும் ஒரு சமூகமாக சிந்திக்க வேண்டும். இந்தக் குற்றங்கள் யாவும் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. அதை என்னால் உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான தண்டனையை அனைவரும் அறியும் வகையில் செய்ய வேண்டியது இன்றைய அவசியத் தேவை” என சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற இந்த விழாவின் தருணங்களுடன், பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மிகத் தீவிரக் கருத்துகளை முன்வைத்தார். கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரதமர் தனது உரையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து, இந்தக் கொடுஞ்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இன்று செங்கோட்டையில் இருந்து எனது வேதனையை நான் வெளிப்படுத்துகிறேன். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள் குறித்து நாம் அனைவரும் ஒரு சமூகமாக சிந்திக்க வேண்டும். இந்தக் கொடுமைகள் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. அதனை என்னால் உணர முடிகிறது. இத்தகைய செயல்களை செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்பதை அறியும் வகையில் செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான தண்டனையை அனைவரும் அறியும் வகையில் செய்ய வேண்டியது இன்றைய அவசியத் தேவை.

பெண் உரிமை சார்ந்த மேம்பாடு என்பது அவசியாமானது. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு என்பது பெண்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை மட்டுமல்ல, தாயின் பராமரிப்பில் உள்ள குழந்தை சிறந்த குடிமகனாக வளர்வதை உறுதி செய்வதற்கான நோக்கமும் அடங்கியுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சுமார் 10 கோடி பெண்கள் பலன் அடைந்துள்ளனர். பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்து வருவதை கண்டு பெருமை கொள்கிறோம். இது சமூக மாற்றத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. பல துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் உரையின் மேலும் சில முக்கிய அம்சங்கள்: “தேசத்தின் விடுதலைக்காக தங்களது உயிரை துறந்தவர்களுக்கு இந்நேரத்தில் வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்த நாடு அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ‘வளர்ந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. இதற்காக பலதரப்பட்ட மக்கள் உழைத்து வருகின்றனர். அன்று 40 கோடி மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றினார். தற்போதுள்ள 140 கோடி பேர் தேசத்தை வல்லரசு ஆக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் நமது கவலை அதிகரித்துள்ளது. இருந்த போதும் நாம் அதிலிருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசம் துணை நிற்கும். மற்ற ஜி20 நாடுகளை விடவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்து இந்தியா அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதில் விண்வெளித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதை கருத்தில் கொண்டு விண்வெளித் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம்.

உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை இந்தியா விரைவில் அடையும். 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த வேண்டுமென்பது நமது கனா. இந்த நேரத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நம் வீரர், வீராங்கனைகளை வாழ்த்துகிறேன். ‘வளர்ந்த பாரதம் 2047’ இலக்கை அடைய நாம் 24×7 உழைக்க வேண்டும். சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன.

அண்டை நாடுகளில் அமைதியை உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்வி பயில்வதற்கான இடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டிய அவசியம் இருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதில் பெரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடிக்கடி நடத்தப்படும் தேர்தல் காரணமாக தேசத்தின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகின்றன. அதை கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை அரசியல் கட்சிகள் ஆதரிக்க வேண்டும்.

இயற்கை பேரிடரில் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், சொத்துகளையும் இழந்துள்ளனர்; தேசமும் நஷ்டத்தை சந்தித்தது. அவர்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

#VocalForLocal என்பது இந்திய பொருளாதாரத்தின் மந்திரமாக மாறியுள்ளது. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மூலம் ஒவ்வொரு மாவட்டமும் இப்போது அதன் உற்பத்தியில் பெருமை கொள்கிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் நிபுணத்துவம் பெற அதன் தனித்துவமான பலத்தை அடையாளம் காண முயல்கிறது. ஏன் ஒவ்வொரு உபகரணத்திலும் ‘மேட் இன் இந்தியா’ சிப் இருக்கக் கூடாது? இந்தக் கனவை நனவாக்கும் ஆற்றல் நம் நாட்டிற்கு உண்டு. 6G நெட்வொர்க்குகளின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம்.

அரசியலில் ஒரு லட்சம் இளைஞர்களை, குறிப்பாக அரசியல் பின்புலம் இல்லாத குடும்பங்களை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும். வாரிசு, சாதிய தீமைகளை எதிர்த்துப் போராட, இந்திய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதே இதன் நோக்கம்” என்றார் பிரதமர் மோடி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.