ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பது ஏன்? – அமைச்சர் விளக்கம்

சென்னை: “ஆளுநருடைய கருத்தியல் சார்ந்திருக்கக் கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கிற அந்தப் பதவியின் மீதும், அந்தப் பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநருடைய அழைப்பினை ஏற்று தேநீர் விருந்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம்,” என்று தமிழக நிதி மற்றும் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆளுநர் தேநீர் விருந்தை பொறுத்த அளவில், திராவிடர் கழகம் புறக்கணிப்பதாக தெரிவித்தது. அரசினுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசின் சார்பில் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். முதல்வர், அமைச்சர்களுக்கு எல்லாம் ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார். அரசின் சார்பில், ஆளுநருடைய அழைப்பினை ஏற்று அந்த விருந்தில் நாங்கள் கலந்து கொள்வதாக முடிவு செய்திருக்கிறோம். அந்த விருந்தில் பங்கேற்கிறோம்,” என்றார்.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஆளுநரின் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தொடர்ந்து அவர் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார். அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆளுநரின் இத்தகைய நிலைப்பாடுகளை குறித்து அதற்கான விளக்கங்கள் அவ்வப்போது அமைச்சர்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கருத்துகள் என்பது வேறு; அரசினுடைய நிலைப்பாடு என்பது வேறு.

ஆளுநருடைய இத்தகைய கருத்தியல் சார்ந்திருக்கக்கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கிற அந்தப் பதவியின் மீது, அந்தப் பொறுப்பின் மீது முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். எனவே, அரசினுடைய நிலைப்பாடு என்னவென்றால், அவருடைய பதவிக்கு, பொறுப்புக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் கொடுத்திருக்கின்ற இந்த அழைப்பினை ஏற்று இந்த விடுதலைத் திருநாள் விழாவில் அவர் அழைத்திருக்கக்கூடிய தேநீர் விருந்தில் நம்முடைய அமைச்சர்கள் அதில் பங்கேற்கிறார்கள்,” என்றார்.

ஆளுநருடைய பதவிக் காலம் முடிந்தும், ஆளுநர் நீட்டிக்கிறார் என்பதைத்தான் கூட்டணிக்கட்சியினர் சொல்கிறார்கள். அதையெல்லாம் கடந்துதானே தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவிருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நான் ஏற்கெனவே சொன்னதுபோல, அரசியல் கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகள் என்பது திமுகவில் இருக்கக்கூடிய கருத்தியலில் மாறுபாடுகள் இருக்கலாம், மாச்சரியங்கள் இருக்கலாம். ஆனால் ஆளுநர் பொறுப்பு என்கின்ற வகையில், ஆளுநர் பதவி என்பது ஒரு Institution. அந்த Institution-க்கு உரிய மரியாதையை நம்முடைய முதல்வர் எப்போதும் அளிக்கிறார். அவர் ஒருபோதும் அளிக்க தவறியதில்லை. எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநருடைய அழைப்பினை நாங்கள் ஏற்று அதில் கலந்து கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.