மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில் 3-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கிவைத்து, வானில் பறக்கவிடப்பட்ட வண்ண, வண்ண பட்டங்களை பார்வையிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி கடற்கரை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் 3-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி இன்று (ஆக.15) நடைபெற்றது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பட்டம் பறக்க விடும் விழாவை தொடங்கிவைத்தனர். மேலும், கடற்கரை பகுதியில் பறக்கவிடப்பட்ட பல்வேறு விதமான வண்ண, வண்ண பட்டங்களை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் பார்வையிட்டனர்.
பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சுற்றுலாத்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்ததன் காரணமாக, உலகின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். இதில், 3ம் ஆண்டாக சர்வதேச பட்டம் விடும் விழா திருவிடந்தை பகுதியில் உள்ள கடற்கரையில் 4 நாட்களாக நடைபெற உள்ளது.
இதில், பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சர்வதேச பட்டம் விடும் அணிகளைச் சேர்ந்த 40 பட்டம் விடும் வீரர்கள் கலந்து கொண்டு, டால்பின்கள், குதிரை, பூனை, சுறாமீன், நீலத்திமிங்கலம், தங்க மீன்கள், பாம்பு, கரடி, ஆக்டோபஸ், கொரில்லா உள்பட 250-க்கும் மேற்பட்ட பட்டங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த உள்ளனர். இந்த பட்டம் விடும் திருவிழாவில், ஜல்லிக்கட்டு சிறப்பை விளக்கும் வகையில் சிறப்பு பட்டத்தை தமிழக குழுவினர் பறக்க விடுவார்கள்.
‘உங்கள் வாழ்க்கையை வண்ணமாக்குங்கள்’ என்பதே இந்த ஆண்டு காத்தாடி திருவிழாவின் மையபொருளாகும். மேலும், கடந்தாண்டு 150 பட்டங்கள் பங்கேற்றன. இந்தாண்டு பட்டம் விடுவோர் கூடுதலாக பங்கேற்பதால், பறக்க விட உள்ள 250 பட்டங்களுக்கு அதிக இடம் தேவைப்படுவதால், இப்பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று கோப்ரா பட்டம் ஆகும். இது, அதன் வகை பட்டங்களில் உலகிலேயே மிகப்பெரியதாகும். இந்த பட்டம் விடும் திருவிழா சிறப்பாக உள்ளதை தெரிவிக்கும் வகையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று வருகை தந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
மேலும், இந்தாண்டு முதல் முறையாக மிகப்பெரிய ராட்சத வண்ணமயமான ‘டெடி பியர்’ இடம்பெறப்போகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி, சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் ச.கவிதா உள்பட சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.