நதியாட் (குஜராத்): சுதந்திர தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெடா மாவட்டம் நாடியாட் நகரில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது:
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் செமிகண்டக்டர் போன்ற வளர்ந்து வரும் துறைகள் புதியமுதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தன. மின்னணுவியல் மற்றும் சிப் உற்பத்தி துறைகள் இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளன.
முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்தியாவின் முதல் செமிகண்டக்டரை உற்பத்தி செய்யும் பெருமை குஜராத் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது.
2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்போது அதில் குஜராத் மாநிலம் முன்னிலையில் இருக்க உறுதிபூண்டுள்ளது. அதற்கான, திட்ட நடவடிக்கைகளை மாநில அரசு தற்போதே வகுத்து செயல்பட தொடங்கியுள்ளது.
இவ்வாறு பூபேந்திர படேல் பேசினார்.