பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை ஹினா கான். பல சின்னத்திரை தொடர்களில் நடித்த இவர் பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். சமீபத்தில் இவர் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகின. இது வதந்தியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் தனக்கு மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனக் கடந்த ஜூன் 28-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹினா கானே பதிவிட்டிருந்தார்.
இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவுகளை இட்டு வருகிறார். ஹீமோ தெரப்பியால் முடி உதிர்வு பிரச்னையை சந்தித்த ஹினா கான் சமீபத்தில் தனது தலைமுடியை முழுவதுமாக நீக்கிக்கொண்டார். இதனால் வருத்தப்பட்டு முடங்கிக் கிடக்காமல் தனக்கு ஏற்றார்போல் விக் ஒன்றினைத் தயாரித்து மிகுந்த தன்னபிக்கையுடன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் அந்தப் பதிவில், ” என்னுடைய இந்தப் போராட்டத்தில் தலைமுடியை இழக்க நேரிடும் என்று எனக்குத் தெரியும். அதனால் எனது முடியை முழுவதுமாக நீக்கிக்கொண்டேன். இந்த சவாலான நேரத்தில் ஆறுதல் அளிக்கும் வகையில் எனது சொந்த தலைமுடியிலேயே விக் செய்ய முடிவு செய்தேன். இதுபோன்ற போராட்டங்களை எதிர்கொள்ளும் துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதைக்கூற விரும்புகிறேன்.
நான் அதை அணியும்போது எப்படியோ என் இழந்த முடியுடன் மீண்டும் இணைந்தது போல் உணர்கிறேன். இது ஒரு கடினமான காலக்கட்டம்தான். ஆனால் அதை இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக்கொண்டு நான் கடந்து செல்ல விரும்புகிறேன். நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.