திருப்பதி திருமலையில் பவித்ரோற்சவம் கோலாகலமாக தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. நாளை வரை (ஆகஸ்டு 17) தொடர்ந்து மூன்று நாட்கள் விழா நடைபெறும்.

முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பசுவாமி புனித மண்டபத்தில் உள்ள யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு ஹோமங்கள் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் ஸ்னாபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேத பண்டிதர்கள் பஞ்சசூக்த பாராயணம் செய்தனர். பின்னர் பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மாலையில், நான்கு மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் காரணமாக கோவிலில் திருப்பாவாடை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபாலங்கரண சேவை ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஆண்டு முழுவதும் சமயப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளால் தோஷங்கள் ஏற்படுகின்றன. இந்த தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.