காமெடி நடிகர் தெனாலியின் மகனுக்கு கல்விக்கட்டணத்தைச் செலுத்தி, கண்ணீரைத் துடைத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. ‘ரன்’, ‘சாமி’,’ரோஜாக்கூட்டம்’, ‘தென்னவன்’ என 45-க்கும் மேற்பட்ட படங்களில் விவேக்குடன் இணைந்து நடித்தவர் தெனாலி.
விவேக் மறைவிற்குப்பிறகு பட வாய்ப்புகள் குறைந்து, தனது பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியாமல் சிரமப்பட்டு வருபவரின் குடும்பச் சூழ்நிலையை உணர்ந்த நடிகர் விஜய் சேதுபதி, ’நான் இருக்கேன்’ என நம்பிக்கையூட்டி தெனாலி மகனின் கல்விக்கட்டணத்தை செலுத்தியது சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்துவருகிறது. இதுகுறித்து, நடிகர் தெனாலியிடம் பேசினேன். ”விஜய் சேதுபதி சார் நடிக்கிற படத்தோட பேர் மட்டும் மகாராஜா இல்லீங்க. உண்மையிலேயே அவர் அந்த பேருக்கேத்த மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு வாரிக்கொடுக்கிற மகாராஜாதான்”என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் தெனாலி.
“என்னோட சொந்த ஊர் பெரம்பலூர். ஒழுங்கா படிக்காததால ஊரைவிட்டு சினிமாவுக்கு ஓடிவந்துட்டேன். அத்தனை சினிமா கம்பெனிகளுக்கும் வாய்ப்பு தேடி பசி பட்டினியோடு அலைஞ்சு திரிஞ்சேன். அப்போதான், எனக்கு நடிகர்கள் பாவா லட்சுமணன், ’ஸ்டில்ஸ்’ சிவா நட்பு கிடைச்சது. நடிக்க வாய்ப்பு கிடைக்காததால ஸ்டில்ஸ் சிவாகிட்டே 16 படங்களுக்கு அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். பல குரல்களில் மிமிக்ரியெல்லாம் பண்ணுவேன். இதையெல்லாம் பார்த்த விவேக் சார்தான், ‘சுதந்திரம்’ படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதுலருந்து, அவரோட 45 படங்கள் பண்ணிட்டேன். அவரோட பெரும்பாலான படங்கள்ல வாய்ப்புக் கொடுத்திருந்தார்ன்னு சொல்றதைவிட வாழ்க்கை கொடுத்திருந்தார்னுதான் சொல்லணும்.
‘சாமி’ படத்துல விவேக் சார், பட்டியலின மக்களை தேசியக்கொடி ஏற்ற வைக்கிற சீன்ல நானும் நடிச்சேன். அது ரொம்ப ஃபேமஸ். அதேமாதிரி, அன்னாசிப்பழ காமெடியும் ஃபேமஸ். அவர், உயிரோட இருந்தவரைக்கும் எனக்கு பெருசா எந்தக் கஷ்டமும் வந்ததில்ல. தன்கூட நடிக்கிறவங்களும் முன்னேறணும், நல்லா வாழணும்னு நினைக்கிற தங்கமான மனசு கொண்டவர். அவரோட பிறந்தநாளுக்கு மாலை போடப்போனாக்கூட, ‘எதுக்குய்யா தேவையில்லாம செலவு பண்றீங்க?’ன்னு அன்பா கோவிச்சிக்கிட்டு, போகும்போது காசு கொடுத்து அனுப்புவார். அப்படியொரு பாசக்காரர்.
என் பொண்ணு ரம்யாவையும் பையன் வின்னரசனையும் நல்ல ஸ்கூல்ல சேர்த்து படிக்கவெச்சதே விவேக் சார்தான். பிள்ளைங்களும் அதை உணர்ந்து நல்லா படிப்பாங்க. பொண்ணு ரம்யா ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தா. அவரோட ஊக்கத்தாலேயே நல்லா படிச்சு யுனிவர்சிட்டியிலயே 7-வது இடம் வந்து கோல்டு மெடல் வாங்கினா.
அந்த மெடலைக்காட்டி, விவேக் சாரை சந்தோஷப்பட வைக்கணும்னு இருந்தப்போதான், அவர் இறந்த செய்தி எங்களை நிலைகுலைய வெச்சது. எங்கக் குடும்பத்துக்கே அது பேரிடி; பேரிழப்பு. தினந்தினம் அவரை நினைச்சு துடிச்சிக்கிட்டிருந்தேன். அவர், இருந்தவரைக்கும் எங்களை நல்லாப் பார்த்துக்கிட்டார். அவரோட மறைவுக்குப்பிறகு, எனக்கு சரியா பட வாய்ப்புகள் கிடைக்கல. சின்ன கேரக்டர்ங்கிறதால 1000, 1500 ரூபாய்தான் சம்பளமே கிடைக்கும்.
வீட்டு வாடகையே பத்தாயிரம் ரூபாய் போயிடும். பொண்ணு இப்போ சி.ஏ படிக்கிறா. அவளுக்கு வருடத்துக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் வரைக்கும் ஃபீஸ் கட்டணும். எனக்கு சுகர் வேற இருக்கு. ஒற்றை ஆளா குடும்பச்செலவு, பிள்ளைகளோட படிப்புச் செலவுன்னு எல்லாத்தையும் சம்பாளிச்சுக்கிட்டு வர்றேன். அப்பப்போ, நண்பர் பாவா லட்சுமணன் தான் நண்பர்கள் மூலமா உதவிகள் செய்துக்கிட்டிருக்கார். ரொம்ப நல்ல மனசுக்காரர். நல்லாருக்கணும். இப்பவும், அவர்மூலமாத்தான் எனக்கு விஜய் சேதுபதி சார் இப்படியொரு உதவியைச் செஞ்சிருக்கிறார்.
மகன் வின்னரசன் பிசியோதெரபிஸ்ட் படிக்கணும்னு ஆசைப்பட்டான். அவனுக்கு சீட் கிடைக்கவே இல்ல. விக்ரமன் சார்தான் எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டில சீட்டும் கிடைக்க வெச்சு, ஃபீஸ் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கவும் வெச்சார். மகனுக்கு இதுதான் படிக்கணும்னு விருப்பம். நாமதான் படிக்கல. நம்ப பிள்ளைங்களாவது நல்லா படிக்கட்டுமேன்னு கடந்த ஒன்றரை மாசமா 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் தேற்றிட்டேன். ஆனா, அதுக்குமேல திரட்ட எனக்கு தெம்பில்ல.
அப்போதான், பாவா லட்சுமணன்கிட்டச் சொல்லி அழுதேன். என் சூழ்நிலையைப் புரிஞ்சிக்கிட்டு விஜய் சேதுபதி சார்கிட்ட கூப்ட்டு போனார். ‘நீங்க கவலைப்படாதீங்க… நான் இருக்கேன்’ன்னு சொல்லி இந்த வருடத்துக்கான ஃபீஸ் 76 ஆயிரம் ரூபாயை கட்டி பேருதவி செஞ்சார் விஜய் சேதுபதி சார். இந்த நன்றியை வாழ்நாள் முழுக்க நாங்க மறக்கவேமாட்டோம். உண்மையிலேயே அவர் ஒரு மகாராஜான்னு தொடர்ந்து நிரூபிச்சுக்கிட்டிருக்கிறார்” என்கிறார் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீருடன்.