கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில்,அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் கைதாகி ஜாமீனில் கையெழுத்திட்டு வரும் பிரவீண் என்பவர் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கரூர் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த ஜூலை 16-ம் தேதி கைது செய்யப்பட்டு அவருடன் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தவர் பிரவீண் (23). கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நாள்தோறும் காலை, மாலையும், வாங்கல் காவல் நிலையத்தில் மதியமும் கையெழுத்திட்டு வருகிறார். சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (ஆக. 16ம் தேதி) காலை பிரவீண் கையெழுத்திட்டு விட்டு வீட்டுக்கு திரும்பியப் போது கரூர் கோவை சாலையில் உள்ள ரெட்டிபாளையம் அருகே சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அருகேயிருந்த கடையில் தேநீர் அருந்த சென்றுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் பிரவீணை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதைப் பார்த்து, அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் திரண்டதால் தாக்குதல் நடத்திய மர்மகும்பல் காரில் தப்பிச் சென்றனர். காயமடைந்த பிரவீண் தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில பிரவீண் 6 பேர் கொண்ட மர்மகும்பல் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.