நில அபகரிப்பு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், அரசியல்வாதிகள் உதவியுடன் நில அபகரிப்பு சம்பவங்கள் நடப்பதாகவும், இதில் போலீஸாரை கண்காணிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. முன்னதாக, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், சோழிங்கநல்லூரில் தனக்கு சொந்தமான நிலத்தை கோபாலகிருஷ்ணன் என்பவர் அபகரித்துவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டு, நிலத்தை மீட்டுத் தருமாறும், தனக்கும் தன்னுடைய நிலத்துக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கார்த்திக் தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் போலீஸ் முழுக்க முழுக்க கோபாலகிருஷணனுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதையடுத்து, இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “இந்த நில உரிமை தொடர்பான ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனுதாரர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. மேலும், தனது நிலம் அபகரிக்கப்படுவதாக கோபாலகிருஷணனுக்கு எதிராக நீலாங்கரை காவல் நிலையத்தில் ஏற்கெனவே மனுதாரர் புகாரளித்தும், கடந்த மே மாதம் கோபாலகிருஷ்ணன் போலீஸார் துணையுடன் அந்த நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து கட்டடங்களை இடித்திருக்கிறார்.
இதில், நிலம் கார்த்திக்குக்கு சொந்தமானது என்பதற்கான முகாந்திரம் இருந்தும், போலீஸ் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், கண்ணை மூடிக்கொண்டு நிலத்தை அபகரிக்க உதவியிருக்கிறது. இது தொடர்பாக, உதவி ஆணையரிடம் நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது மனுதாரர் புகாரளித்த போதும், காவல் ஆய்வாளருக்குச் சாதமான அறிக்கையை உதவி ஆணையர் அளித்திருக்கிறார். இவ்வாறு தமிழகத்தில், போலீஸ், ரெளடிகள், அரசியல்வாதிகள் போன்றோரின் உதவியுடன் நில அபகரிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், இதுபோன்ற வழக்குகளில், விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக விசாரிக்காமல், சிவில் வழக்கு என்று கூறி நில அபகரிப்பாளர்களுக்கு ஆதரவாக போலீஸார் விலகுவது வேதனையளிக்கிறது.
இந்தப் போக்கு நீடித்தால் அப்பாவி பொதுமக்கள், காவல்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கை சீர்குலைந்து விடும். அதோடு, நில மாஃபியாக்கள் மற்றும் ரெளடிகளைக் காவல்துறையே ஊக்குவிப்பது போலாகிவிடும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சமீபகாலமாகத் தமிழகத்தில் ரெளடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு தொடர்பான வன்முறைச் சம்பவங்கள், கொலைகள் உள்ளிட்ட வழக்குகளை போலீஸார் எவ்வாறு விசாரிக்கின்றனர் என்பதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கூறி இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றினார். அதுமட்டுமல்லாமல், சிறப்பு குழுவை அமைத்து நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சிபிஐ தென் பிராந்திய இணை இயக்குநருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88