புதுடெல்லி: குரங்கம்மை நோய் நிலைமை, தடுப்பு நடவடிக்கைகள், தயார்நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக சுகாதார அமைப்பு (WHO) 14 ஆகஸ்ட் 2024 அன்று குரங்கம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, குரங்கம்மை நோய் நிலைமை, தயார்நிலை குறித்து மத்திய சுகாதாரம் – குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா மூத்த அதிகாரிகளுடன் இன்று (17-08-2024) விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், மிகுந்த எச்சரிக்கையுடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், தரை வழி எல்லைப் பகுதிகளில் உள்ள சுகாதார பிரிவுகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சோதனை ஆய்வகங்களை தயார் செய்தல், நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல், சிகிச்சைக்கான உரிய சுகாதார வசதிகளை தயார் செய்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், குரங்கம்மை நோய்த்தொற்றுகள் பொதுவாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், நோயாளிகள் உரிய சிகிச்சை மூலம் குணமடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது. பாதிக்கப்பட்ட நோயாளியுடன் நீண்டகால நெருங்கிய தொடர்பு, பாலியல் தொடர்பு, உடல் வழியான திரவங்களுடன் தொடர்பு போன்றவற்றின் மூலம் இந்த நோய்த் தொற்று ஏற்படும் என விளக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பு, முன்னதாக ஜூலை 2022-ல் குரங்கம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது. பின்னர் மே 2023-ல் அதை ரத்து செய்தது. 2022 முதல் உலகளவில், 116 நாடுகளில் குரங்கம்மை காரணமாக 99,176 பேர் பாதிக்கப்பட்டனர். 208 இறப்புகள் பதிவாகின. 2022 -ல் அவசர நிலை அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் மொத்தம் 30 பாதிப்புகள் கண்டறியப்பட்டன. கடைசியாக மார்ச் 2024-ல் பதிப்பு கண்டறியப்பட்டது.
தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய கூட்டு கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று (2024 ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பூச்சிகளால் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்திற்கான தேசிய மையம், சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம், மத்திய அரசு மருத்துவமனைகள், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றின் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
வரவிருக்கும் வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு சிலருக்கு பதிப்பு கண்டறியப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றாலும், இந்தியாவில் பெரிய பரவலும் அதனால் ஆபத்துகளும் ஏற்படாது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிலைமையை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.