Shah Rukh Khan: ஒரு நேரம் மட்டுமே உணவு, அதிகாலை 4 மணி நேரம் மட்டுமே உறக்கம் – இது ஷாருக் பார்முலா!

நடிகர் ஷாருக்கான் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சொன்ன நேரத்தில் வரமாட்டார் என்பது அனைவரின் புகாராக இருந்து வருகிறது. அதுவும் பார்ட்டிகளுக்கு அதிகாலை நேரத்தில் முடியும் போது வந்து அதிர்ச்சி கொடுப்பார் என்கிறார்கள். பகலில் வாழவேண்டிய வாழ்க்கையை ஷாருக்கான் இரவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் தனது அன்றாட வாழ்க்கை குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் தினமும் 5 மணிக்குத்தான் உறங்குவேன். படப்பிடிப்பு இருந்தால் காலை 9 அல்லது 10 மணிக்கு எழுந்துவிடுவேன். தினமும் ஒரு நேரம் மட்டுமே சாப்பிடுவேன். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு அதிகாலை 2 மணிக்குத்தான் வருவேன். அதன் பிறகு குளித்துவிட்டு சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வேன். அதன் பிறகு உறங்கச்செல்வேன். வேலையைப் பொறுத்து சாப்பாடும், உறக்கமும் மாறுபடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக்கான்

பாலிவுட் மன்னனாகக் கருதப்படும் ஷாருக்கான் அடுத்ததாக ‘கிங்’ என்ற படத்தில் தனது மகள் சுஹானாவுடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் குறித்து ஷாருக்கான் அளித்த பேட்டியில், “இப்படம் ஒரு ஆக்‌ஷன் இந்திப்படம். இது போன்ற ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று நீண்ட நாள்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையிலேயே கடந்த 7 – 8 ஆண்டுகளாக இது போன்ற ஒரு படத்திற்காகக் காத்திருந்தேன். சுஜோய் கோஷ் இதனை இயக்குவதற்குச் சரியான தேர்வு. நாங்கள் உணர்வுபூர்வமான, ஆக்‌ஷன் படத்தில் ஒன்றுக்காகச் சேர்ந்துள்ளோம்” என்றார்.

ஷாருக்கான்

“ஹாலிவுட்டில் நடிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லையா?” என்று கேட்டதற்கு, “ஹாலிவுட் எனது கனவு கிடையாது. ஆனால் நான் நடிகராகவோ அல்லது தயாரிப்பாளராகவோ அல்லது எழுத்தாளராகவோ இருக்கும் இந்திப் படத்தை ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் பார்க்கவேண்டும் என்பது எனது கனவு” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘கிங்’ படத்தில் ஷாருக்கான் மாபியா கும்பலின் மன்னனாக நடித்துள்ளார். இப்படத்தில் அபிஷேக் பச்சனும் நடிக்கிறார். ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வெப்சீரிஸ் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.