விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆன்மிகத் தலமாக இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதக் கடைசி வெள்ளி புகழ் வாய்ந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் திருவிழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதனையொட்டி, திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிக் கடைசி வெள்ளித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மன் கருட பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
முன்னதாக, காலை 9 மணிக்கு உற்சவருக்குக் கும்ப பூஜை, யாக பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. அபிஷேகத்தின் போது பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர், தயிர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. கோயிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனை வேண்டி, அக்னிச்சட்டி, மா விளக்கு பறக்கும் காவடி, தேர்இழுத்தல், ஆயிரம் கண் பானை, தவழும்பிள்ளை, கரும்புக் காவடி எனத் தங்களின் நேர்த்திக்கடனை அம்மனுக்குச் செலுத்தினர்.
மதியம் இரண்டு மணிக்கு மேல் அம்மன் கருட வாகனப் பல்லக்கில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியே பவனி வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் வாகனம் ஆற்றில் இறங்கித் திருக்கோயில் சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் பக்தர்களின் வசதிக்காகக் கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிக்காக முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புக்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நான்கு துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருவிழாவைக் காண மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து குவிந்ததைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத்துறை சார்பில் பக்தர்கள் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவிழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் உறுப்பினர்கள் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.