காஞ்சிபுரம்: “இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதிக்கான கட்டிடத்தை அவர் இன்று (ஆக.17) திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசியது: “ஃபாக்ஸ்கான் நிறுவனம் சிப்காட் ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் மகளிர் தங்கும் விடுதிகளை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் 41 ஆயிரம் பேர் பணி செய்கின்றனர். இவர்களில் 35 ஆயிரம் பேர் பெண்கள். ஆண்களுக்கு பெண்கள் சரிநிகர் சமானம் என்று நிலையை தாண்டி பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை இந்த நிறுவனம் கொடுத்துள்ளது. தற்போது பணி செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.706.5 கோடி மதிப்பில் மகளிர் தங்கும் விடுதிகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக அளவு பெண்கள் பணிக்கு செல்கின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். தொழிற்சாலைகள் மற்றும் சிப்காட் அமைப்பதற்கான நிலங்கள் கண்டறியும் பணி நடைபெற்றது. பல்வேறு தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. 40 ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டறிய இலக்கு வைக்கப்பட்ட 41,000 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இதில் 12,500 ஏக்கர் நிலம் சிப்காட் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிப்காட் நிறுவனம் மூலம் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் ஆகிய இடங்களில் மூன்று தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. இந்த வசதிகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வதோடு, உங்கள் சொந்த குடியிருப்புகளைப்போல் கவனமாக பராமரிக்க வேண்டும்.
2030-ஆம் ஆண்டுக்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பான செயல்பாடுகள், அந்த இலக்கை நாம் விரைவாக எட்டுவோம் என்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. அதற்கு ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.
இந்த நிகiழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு, மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஜி.செல்வம், கூடுதல் தலைமைச் செயலர்கள் முருகானந்தம், அருண்ராய் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மகளிர் தங்கும் விடுதிகள் ரூ.706.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 18,720 பேர் தங்க முடியும். இந்த வளாகமானது, சுமார் 22.48 இலட்சம் சதுர அடி பரப்பிலான இடத்தில் தரைத்தளம் மற்றும் 10 அடுக்குமாடி கட்டடமாக 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 பிரிவுகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தில், ஒவ்வொரு பிரிவிலும் 1,440 நபர்கள் தங்கும் வகையில் 240 அறைகள் அமைந்துள்ளது. இங்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் 33 KVA துணை மின் நிலையம், நவீன தீயணைப்பு வசதிகள், உட்புறச் சாலைகள், தெருவிளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 3 மின் தூக்கிகள் என மொத்தம் 39 மின்தூக்கிகள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒரு ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமையலறை, உணவுக்கூடம், திறந்தவெளி பொழுதுபோக்கு மையத்துடன் கூடிய வண்ண மலர் செடிகள், மரங்கள், செயற்கை நீரூற்று அமைப்புகள் அமைக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூபாய் 498 கோடி நிதியுதவியும், மத்திய அரசின் சார்பில் ரூபாய் 37.44 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தங்கும் விடுதி கட்டடமானது, ஃபாக்ஸ்கான் நிறுவனத்திலுள்ள பெண் பணியாளர்கள் தங்குவதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. வெளியூரில் இருந்து வந்து இங்கு தங்கி பணியாற்றும் பெண்களுக்கு இந்த விடுதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.