பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி, இந்தியாவின் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
2015-ம் ஆண்டு முதல் ஈட்டி எறிதலில் பங்கேற்று வருகிறார் அர்ஷத் நதீம். கானேவால் என்கிற கிராமம்தான் அவரின் சொந்த ஊர். எறிவதற்கு ஈட்டியே இல்லாத, ஆடுவதற்கு மைதானமே இல்லாத ஒரு சூழலிலிருந்துதான் அவர் வந்திருக்கிறார். அர்ஷத்தின் தந்தை ஒரு கட்டடத் தொழிலாளி. பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட அர்ஷத்துக்கு ஊர் மக்கள்தான் கூட்டாகப் பணம் சேர்த்து வழங்கி அவரை வெளியூர் போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
தங்கம் வென்று தனது ஊருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும் அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தான் அரசு 10 கோடியைப் பரிசாக வழங்கியது. பல்வேறு நிறுவனங்களும் அவருக்குப் பல பரிசுகளை வழங்கினர். ஆனால் அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் எருமை மாடு ஒன்றைப் பரிசாக அளித்திருந்தார்.
இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது. இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் மிகவும் வைரலானது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அர்ஷத் நதீமிடம் மாமனார் எருமை மாடு பரிசு அளித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு அவர், “கடவுள் அருளால் அவர் சற்று வசதி படைத்தவர். எருமை மாட்டிற்கு பதிலாக 5 அல்லது 6 ஏக்கர் நிலத்தை எனக்குப் பரிசாக கொடுத்திருக்கலாம். சரி, எருமை மாடும் பரவாயில்லைதான். அதுவும் மதிக்கத்தக்கதுதான்!” எனச் சிரித்துக்கொண்டே நகைச்சுவையாகப் பதிலளித்திருக்கிறார்.