வாஷிங்டன்: மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 175 பேர் உயிரிழந்தனர்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தகனடா தொழிலதிபர் தஹாவூர் ராணாவுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மும்பை தாஜ் ஓட்டலில் அவர்தங்கியிருந்து, அந்த ஓட்டல் குறித்த முழுமையான விவரங்களை லஷ்கர் தீவிரவாதிகளுக்கு வழங்கினார். இதன் அடிப்படையிலேயே தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபரில் தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். கடந்த 2013-ம் ஆண்டில் அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த சூழலில் மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக ராணாவிடம் விசாரணை நடத்த அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு கோரியது. இதை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டது.
அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ளநீதிமன்றத்தில் ராணா வழக்கு தொடர்ந்தார். கடந்த 2023-ம் ஆண்டுமே மாதம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராணா மீண்டும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், ராணாவின் மனுவை கடந்த 15-ம் தேதிதள்ளுபடி செய்தது. “இந்தியா, அமெரிக்கா இடையே கைதிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனவே ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க எந்த தடையும் இல்லை” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த உத்தரவை எதிர்த்து ராணா மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். சட்டப் போராட்டங்களை தாண்டி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.