Cinema Roundup: அஜித் படத்தில் மோகன்லால் உறவினர்; தேசிய விருதுக்கு நெகிழ்ந்த தனுஷ்!

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அஜித் படத்தில் நடிக்கும் இந்த நபர் யார் தெரியுமா?

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு டாப் கியரில் நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்திருக்கிற அனைத்து நடிகர்களின் லுக்கையும் போஸ்டர் மூலமாக ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். ஆரவ், ரெஜினா ஆகியோருக்கு போஸ்டர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நடிகர் நிகில் நாயருக்குப் போஸ்டர் வெளியிட்டு இப்படத்தில் நடித்து வருவதாக அறிவித்திருக்கிறார்கள். இவர் நடிகர் மோகன் லாலின் உறவினராம். இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘சர்வம் தாளமயம்’ படத்தின் மூலமாகதான் இவர் அறிமுகமானார். பிரணவ் மோகன்லாலுடன் ‘ஹிருதயம்’ படத்திலும் நடித்திருந்தார். குரு சோமசுந்தரமுடன் ‘மீம் பாய்ஸ்’ வெப் சீரிஸிலும் களமிறங்கி பெரிதும் பரிச்சயமாகி இருந்தார்.

தேசிய விருதுக்கு நெகிழ்ந்த தனுஷ்!

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை ‘திருசிற்றம்பலம்’ படத்திற்க்காக நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையும் தாண்டி இந்த படத்தில் வரும் ‘மேகம் கருக்காதா?’ பாடலுக்காக சிறந்த நடன இயக்குநர்களுக்கான விருது ஜானி மாஸ்டருக்கும் சதீஸ் மாஸ்டருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு இப்படியான இரண்டு அங்கீகாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தனுஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். அவர்,” நித்யா மேனன் ஷோபனாவாக தேசிய விருதை வென்றிருப்பது எனக்கு பர்சனலான வெற்றி. ஜானி மாஸ்டருக்கும் சதீஷ் மாஸ்டருக்கும் வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒயாத இசைப்புயல்!

பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த ஒலி வடிவமைப்பு என நான்கு தேசிய விருதுகளை தட்டித் தூக்கியிருக்கிறது. இதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ரஹ்மானுக்கு 7வது தேசிய விருது. இந்திய இசையமைப்பாளர்களில் அதிகமுறை தேசிய விருதைப் பெற்றவர்கள் பட்டியலில் இவர் ஏற்கெனவே முன்னிலை வகித்திருந்தார்.

இளையராஜா இதுவரை நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார். பாலிவுட் இயக்குநர் மற்றும் இசையமைபாளரான விஷால் பரத்வாஜ் இதுவரை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார். மறைந்த இசையமைப்பாளரான ஜெயதேவ் மூன்று முறை தேசிய விருதை தட்டிச் சென்றிருக்கிறார். 70 களிலும் 80 களிலும் இவருடைய பாடல்கள்தான் பாலிவுட் எங்கும் ஒலித்தது.

சந்தோஷ் நாராயணனின் புதிய தொடக்கம்!

12 வருட கரியரில் 50 படங்களை முடித்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் தற்போது ‘ரகிடா என்டர்டெயின்மென்ட்’ என்ற மியூசிக் லேபில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது குறித்து அவர், “என்னுடைய 20 வயதில் இந்த இசைப் பயணம் தொடங்கியது. இசைக்கலைஞனாக என்னுடைய வேலைகளை இந்த இசைத் துறையில் பதிவு செய்ய சென்னைக்கு வந்தேன். கிட்டதட்ட 10 வருடம் வரை எனக்கான வாய்ப்புகளுக்காக நான் அலைந்துக் கொண்டிருந்தேன். இப்படியான பயணம்தான் என்னுடைய கரியருக்கு வழியமைத்துக் கொடுத்தது. மேலும் இந்தத் துறையில் ஒரு நல்ல பிளாட்பார்ம் கிடைத்தால் தகுதியான இசைக்கலைஞர்களுக்கு நல்ல கரியர் அமையும் என்பதை உணர்ந்து இதனைத் தொடங்குகிறேன்!” எனக் கூறியிருக்கிறார்.

சீதா ராமம் இயக்குநருடன் பிரபாஸ்!

சீதா ராமம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் ஹனு ராகவபுடியின் அடுத்த திரைப்படம் மீது அதிகளவிலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 AD’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹிட் கொடுத்திருக்கிறார் நடிகர் பிரபாஸ். இவர்கள் இருவரும் இணையவிருக்கும் திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் முன்பே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. 1940-களில் நிகழும் ஒரு வரலாற்றும் புனைவு கதையைக் கொண்டதாம் இத்திரைப்படம். சீதா ராமம் படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.