கொல்கத்தா மருத்துவமனையில் சமீபத்தில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், தற்போது மும்பை மருத்துவமனையில் பெண் டாக்டர் நோயாளியால் தாக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3:30 மணிக்கு மும்பை மாநகராட்சியால் நடத்தப்படும் சயான் லோக்மான்ய திலக் மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் முகத்தில் காயத்துடன் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு பெண் டாக்டர் சிகிச்சை கொடுத்தார். ஆனால் நோயாளியும், அவருடன் வந்த உறவினர்களும் பெண் டாக்டரை திட்டி மிரட்டினர். நோயாளி மது அருந்தியிருந்தார். அவருடன் வந்தவர்களும் மது அருந்தி இருந்தனர். நோயாளி தனது உறவினர்களுடன் சேர்ந்து பெண் டாக்டரை தாக்க ஆரம்பித்தார். அவர்களிடமிருந்து பெண் டாக்டர் தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றார்.
நோயாளியும், உறவினர்களும் தாக்கியதில் பெண் டாக்டர் காயம் அடைந்தார். பெண் டாக்டரை தாக்கிவிட்டு நோயாளியும், அவரது உறவினர்களும் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த பெண் டாக்டர் சயான் போலீஸில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் நோயாளியைத் தேடி வருகின்றனர்.
மும்பை மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் அக்ஷய் மோரே இது தொடர்பாக அளித்த பேட்டியில், “மும்பை மருத்துவமனையில் பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. டாக்டர்களின் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் செய்துகொள்ள முடியாது. அனைத்து மாநகராட்சி மருத்துவமனையிலும் டாக்டர்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார்.