GOAT: "அஜித் சார் டிரெயிலரைப் பார்த்தார்; பாடலுக்கு விமர்சனங்கள் வந்தன; ஆனால்" – வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகிறது

பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட விஜய்யின் லுக்குடன் ‘ஸ்பார்க்’ பாடல் வெளியாகியிருந்தது. இத்திரைப்படம் எபிக், ஐமேக்ஸ் ஆகிய ஸ்கிரீன்களிலும் வெளியாகும் என்பதை ஸ்பெஷல் போஸ்டர்களோடு படக்குழு அறிவித்திருக்கிறது.

GOAT Trailer

இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்களுக்கு கலவையான விமர்னசனங்கள் வந்திருந்த நிலையில், டிரெயிலரில் யுவனின் பின்னணி இசை பிரமாதமாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அர்ச்சனா, இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் பேசிய வெங்கட் பிரபு, “இது மறக்கமுடியாது பயணம். எப்படி ஆரம்பிச்சு முடிஞ்சதுனு தெரில. இந்தக் கதையை நான் முதன்முதல்ல ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னேன். நிறைய வெளிநாட்டுல எடுத்தோம். ரஷ்யால பெரிய பிரச்னை இருந்தப்போவே அங்க போய் எடுத்தோம். ‘லோலா கிராபிக்ஸ்’ நிறுவனத்தோட சேர்ந்து வேலை பார்த்திருக்கோம். கலவையான விமர்சனம் பாடல்களுக்கு வந்துச்சு. படம் பார்த்துட்டு வரும்போது அது இருக்காது. இது கமெர்சியல் ட்ரீட். கன்டென்டாகவும் நல்லா இருக்கும். விஜய் சார், படத்துல மற்ற கதாபத்திரங்களுக்கும் முக்கியம் இருந்தாதான் நடிக்கிறதுக்கு ஒத்துக்குவாங்க. அந்த விஷயங்களும் இருக்கு. இந்தப் படத்துல முதன்முறையாக விஜி சார்கூட இணைந்து இந்த படத்தோட வசன வேலைகளை பார்த்திருக்கிறேன். விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் பக்கா கமெர்சியல் படம்தான் இது.

GOAT: வெங்கட் பிரபு

ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்காக விஜய் சார் ரசிகராக நானும் வெயிடிங். விஜய் சார் பக்கம் இருந்துதான் அதைப் பத்தி சொல்லணும். கூடிய விரைவுல இருக்குமா இருக்காதான்னு அறிவிப்போம். சோஷியல் மீடியா வந்ததுல இருந்து எல்லா மொழிக்கும் பொதுவாக ஒரு தலைப்பு வைக்கும் போதுதான் ஹாஷ்டேக் டிரண்ட் ஆகும். அதனாலதான் ‘G.O.A.T’னு ஆங்கிலத்துல தலைப்பு வச்சிருக்கோம். படத்துல விஜய் சார் 23 வயசு நபராக இருக்கணும்னு நினச்சேன். அப்போ விஜய் சாரே என்னை மாதிரி இல்லாம போயிடப் போகுதுனு சொன்னாரு. விஜய் சார் ரொம்ப பழக்கப்பட்ட முகம். நீங்க டிரெயிலர்ல பார்த்த விஜய்தான் கிட்டதட்ட படத்துல வருவாரு. ‘ஸ்பார்க்’ பாட்டுலாம் வேற மாதிரி இருந்துச்சு.

இந்தக் காட்சியில இந்த மாதிரியான வசனம், காட்சி வேணும்னு விஜய் சார் கேட்கவே மாட்டாரு. விஜய் சார் அரசியலுக்காக எதுவுமே சேர்க்க சொல்லல. இந்த படம் அரசியல் படமும் இல்ல. ‘காந்தி கலவரம் பண்றதுதான் கதையா, காந்தினு ஏன் பெயர் வச்சீங்க?’ என்கிற கேள்வியெல்லாம் வருது. என் நெருக்கமான நண்பன் பெயர் காந்தி. அவன் என்னென்ன விஷயங்கள் பண்றான் தெரியுமா. இந்த மாதிரியான ஒப்பீடே தப்பு. இந்தப் படத்தில கட்சி கொடியெல்லாம் நாங்க எங்கவும் வைக்கல.

அவர் இந்த அரசியல் சார்ந்த எந்த விஷயங்களையும் வைக்க சொல்லல. சின்ன வயசு விஜய் சார் கதாபாத்திரம்னு சொன்னதும் எல்லோரும் ஜெமினி மேன் படத்தோட சேர்த்து சொல்றாங்க. ‘ஜெமினி மேன்’ படமும் இந்த படமும் ஒன்னு கிடையாது. இந்த படத்துல பெரியப்பா இளையாராஜா சார் பாடுறதுக்கு சூழல் கிடைக்கல. ‘இந்த படத்துல திரிஷா இருக்காங்களா?’ னு கேள்வியெல்லாம் கேட்குறீங்க… இருந்தா நல்லா இருக்கும்.

GOAT டிரைலர் பார்த்துட்டு அஜித் சார், ‘நல்லா இருக்குடா, விஜய்க்கும் டீம்க்கும் என்னோட வாழ்த்துகளை சொல்லிடு’ னு சொன்னாரு” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.