பிரேசிலில் அலுவலகத்தை மூடிய எக்ஸ் நிறுவனம்

பிரேசில்,

உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ் சமூகவலைதளம் செயல்பாட்டில் உள்ளது. இதனிடையே, பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ் உத்தரவிட்டார்.

அதேவேளை, நீதிபதி உத்தரவால் ஏற்கனவே முடக்கப்பட்ட எக்ஸ் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் அறிவித்தார். இதனால், எலான் மஸ்கிற்கு எதிராக நீதிபதி மொரேஸ் விசாரணையை தொடங்கினார். இதனால் இந்த விவகாரம் பூதாகாரமானது.

இதனிடையே, எக்ஸ் தளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கக்கோரி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மொரேஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கி தணிக்கைக்கு உட்பட வேண்டுமெனவும் மொரேஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை, உத்தரவை கடைபிடிக்கவில்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பிரேசிலில் செயல்பட்டு வரும் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சட்ட நிபுணரை கைது செய்வோம் என்றும் நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரேசிலில் உள்ள அலுவலகத்தை மூடுவதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை நிறுத்துவதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரேசிலில் உள்ள அலுவலகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அலுவலகம் மூடப்பட்டபோதும் தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.