கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.18, ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கிய விழாவில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ரூ.100 முகமதிப்பு கொண்ட அந்த நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பெருந்தன்மையோடு கலந்து கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிகாரிகள், விழாவில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார். நாணய வெளியீட்டுக்காக ஒத்துழைத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் முன்னிலை வகித்து வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து முதல்வர் விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட பொருத்தமானவர். சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. கருணாநிதி நூற்றாண்டு விழாவை இந்தியாவே கொண்டாடுகிறது. மாநில உரிமைகளுக்காகப் போராடிய கருணாநிதி நெருக்கடி நேரங்களில் நாட்டுக்கு கைகொடுத்தார். தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சி சார்ந்த அரசல்ல; இங்கே ஓர் இனத்தில் அரசு நடக்கிறது.” போன்ற கருத்துகளை முன்வைத்தார்.

ராஜ்நாத் சிங் புகழாரம்: தொடர்ந்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “கருணாநிதி துணிச்சல் மிக்க தலைவர். தலைசிறந்த நிர்வாகி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். விளிம்புநிலை மக்களுக்கு தரமான வாழ்க்கை நிலையை கொண்டுவந்தவர். 1989லேயே மகளிருக்கான சுய உதவிக் குழுக்களை கொண்டுவந்தவர். பாலின சமத்துவம் பேணும் வகையில் மகளிர் சுய உதவித் திட்டத்தை அவர் கொண்டு வந்தார். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணியவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட கருணாநிதி நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர்.” என்று புகழாரம் சூட்டினார்.

மெரினாவில் மரியாதை: நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு கருணாநிதி அருங்காட்சியகத்தையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.