விபத்தில் சிக்கிய நாடோடி பழங்குடியின பெண்; ஆதார் இல்லாததால் பரிதவிப்பு- சிகிச்சைக்கு உதவிய ஆட்சியர்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கொங்கரை மாம்பட்டு ஊராட்சி, ஈஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வருபவர் நாடோடிப் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி (60). இவர் கடந்த மாதம், 20-ம் தேதி இரவு சாலை விபத்தில் சிக்கியிருக்கிறார். அதில் கை, கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அவரின் உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், லட்சுமிக்கு ஆதார் அட்டை இல்லை எனக் காரணம் காட்டி, அடுத்த நாளே பணியிலிருந்த மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனராம்.

விபத்தில் காயமடைந்த மூதாட்டி

அதைத் தொடர்ந்து லட்சுமியின் உறவினர்கள் ஓரத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, போலீஸார் அலட்சியமாகச் செயல்பட்டதாக, லட்சுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதையடுத்து, இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. நடந்த விவரங்களை அறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசி, ஆதார் அட்டை, மருத்துவக் காப்பீடு இல்லாமல் சிகிச்சை அளிக்குமாறு, பரிந்துரைத்திருக்கிறார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

அதனடிப்படையில், மீண்டும் லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தகடு பொருத்தப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை, காப்பீடு அட்டை இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிட்ட, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு, அந்தப் பகுதியில் வசிக்கும் நாடோடிப் பழங்குடிச் சமூக மக்கள் `நன்றி’ தெரிவித்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.