கொல்கத்தா: கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று மோஹன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணிகளின் ரசிகர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தினர்.
கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று மோஹன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணிகளின் ரசிகர்கள், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் அமைந்துள்ள சால்ட் லேக் மைதானத்துக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்கள் தாங்கள் ஆதரிக்கும் அணிகளின் கொடி மற்றும் ஜெர்சியை அணிந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து அங்கு அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் ரசிகர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் உத்தரவிட்டனர். அதற்கு ரசிகர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தடியடி நடத்தினர்.
இருப்பினும் சில மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் ரசிகர்கள் திரண்டனர். அப்போதும் போலீஸார் தடியடி நடத்தியதாக அங்கிருந்து நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன. அதோடு இரு அணிகளின் ரசிகர்கள் மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கல்யாண் சவுபே உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.