வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் லியாண்டர் நகரில், இந்தியாவைச் சேர்ந்த அர்விந்த் மணி (45) மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவருடைய மகள் அன்ட்ரில் அர்விந்த் (17) சமீபத்தில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்பு வடக்குடெக்சாஸ் பகுதியில் உள்ள ஒருகல்லூரியில் மகளை சேர்ப்பதற்காக மணி காரில் சென்றுள்ளார். அவருடன் மனைவி பிரதீபா, மகள் சென்றனர்.
காரில் சென்று கொண்டிருந்தபோது இவருடைய கார் மீது மற்றொரு கார் மோதியதில் இருகார்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன. இதில், அர்விந்த் மணி, மனைவி பிரதீபா, மகள் அன்ட்ரில் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் மோதிய காரில் இருந்த 2 பேரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அர்விந்த் குடும்பத்தினர் சென்ற கார் மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் சென்ற நிலையில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பின்னால் வந்த கார் மோதி தீப்பிடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அர்விந்த் மணியின் 14 வயது மகன் வீட்டிலேயே இருந்ததால் உயிர் தப்பி உள்ளார். குடும்பத்தினரை இழந்து தவிக்கும் அந்த சிறுவனுக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதுவரை 7 லட்சம் டாலர் நிதி வசூலாகி உள்ளது.