சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள், இந்து அமைப்பினர், வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். இதையடுத்து அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
இந்த ஆண்டு சென்னையில் மட்டும் இந்து முன்னணி சார்பில் 5,501 சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இந்து அமைப்புகள் காவல்துறையினரிடம் அனுமதி கோரி வருகின்றனர். ஏற்கெனவே அனுமதிக்கப்படாத புதிய இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விநாயகர்சிலையை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் திட்டமிடுமாறு டிஜிபி சங்கர் ஜிவால் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், விநாயகர் சதுர்த்தி விழாகொண்டாட்டத்துக்கான கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் சங்கர் ஜிவால் விதித்து, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, ரசாயன கலவை இல்லாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை வைக்க கூடாது. மதவெறி தூண்டும் வகையில், பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்புவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது.
விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், ஊர்வலம் செல்லும் இடங்கள், கரைக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. மினி லாரி மற்றும் டிராக்டர்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். மாட்டு வண்டி, 3 சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக் கூடாது. ஒலிபெருக்கி வைப்பதற்கு காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்பதை கடிதம் மூலம் மின்சார வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். பொது இடங்களில் சிலை வைக்க உள்ளாட்சி அமைப்பு அனுமதி அவசியம்.
மேலும், பயங்கரவாத இயக்கத்தினர் அச்சுறுத்தல் இருப்பதால், காவல்துறை அதிகாரிகள் வழக்கமாக வழங்கும் பாதுகாப்பை காட்டிலும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிக்கையை ஆக.28-ம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எந்தெந்தஇடங்களில் சிலைகள் வைக்கப்பட்டதோ அங்கு தான் சிலைகள் வைக்கஅனுமதிக்க வேண்டும். புதிய மற்றும்பதற்றமான இடங்களில் சிலைகள் வைக்க அனுமதிக்க கூடாது. உரியஅனுமதி இல்லாமல், பேனர்கள், கொடிகள் கட்டுவதை தடுக்க வேண்டும். சிலைகளை கரைப்பதற்கு முன்பாக சிலைகளில் அணிவிக்கப்பட்டுள்ள துணிகள், பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள், பூஜை பொருட்களை முற்றிலும் அகற்றிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.