’தங்கலான்’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் சூழலில் விக்ரம், பார்வதியைத் தாண்டி, ‘மினுக்கி மினுக்கி’ பாடலில் நளினத்துடன் ஆடி, பட ரிலீஸுக்கு முன்பே ஹார்ட்டின்களை அள்ளியவர் ப்ரீத்தி கரன்.
படத்தின் பிரதான பாத்திரங்களுக்கு இணையாக மின்னிய மற்றொரு நடிகை. இந்தப் படத்தில் அவரின் நடிப்பும் நடனமும் அவருக்கு ’நல்ல பேரை’ வாங்கிக்கொடுத்துள்ளது. கடந்த, 2018 ஆம் ஆண்டு ’மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் டாப் 10 போட்டியாளர்களுள் ஒருவராக வந்து ’மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல்’ பட்டம் வாங்கிய ப்ரீத்தி கரன், சமீபத்தில் வெளியான ‘நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’ படத்திலும் நடித்தவர். ’தங்கலான்’ வரவேற்பு குறித்து ப்ரீத்தி கரனிடம் பேசினோம்.
“தங்கலான் பட வரவேற்பு ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். ஏன்னா, விக்ரம் சார், பார்வதி மேடம், பசுபதி சார்ன்னு ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கும்போது, படம் எப்படிப் பேசப்படப்போகுதுன்னு தெரியும். அதேமாதிரி, இரஞ்சித் சார் டீம் கிரியேட்டிவிட்டியிலும் டெக்னிக்கல் அம்சங்களிலும் ரொம்பவே ஸ்ட்ராங். எதிர்பார்த்த மாதிரியே மக்கள் கொண்டாடுறாங்க. குறிப்பா, பெண்கள் ஜாக்கெட் போட்டுக்கிற காட்சியை எல்லாம் ரொம்பவே கொண்டாடுறாங்க. அந்தக் காலத்துல நெருப்பை முதன் முதலா கண்டுபிடிக்கும்போது கிடைச்ச சந்தோஷம் மாதிரிதான் முதன்முதலா ஜாக்கெட் போட்டுக்கும்போது ஏற்பட்ட சந்தோஷமும்! இந்தக் காட்சிகளை வெச்சதுக்காகவே நான் இரஞ்சித் சாருக்கு நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்” என உற்சாகத்துடன் பேசத் தொடங்குகிறார் ப்ரீத்தி கரன்.
”காடு, மேடு, சுரங்கம் தோண்டுதல்னு இந்தப் படத்துல நடிக்கும்போது ஏற்பட்ட சவாலான விஷயங்கள்னா எதைச் சொல்வீங்க?”
”’தங்கலான்’ ரொம்ப ஜாலியா கம்ஃபர்டபிளா உட்கார்ந்து எடுக்கிற படம் கிடையாது. எல்லாமே சேலஞ்சிங்தான். ஏன்னா, கல்லு, மண்ணு, வெயில், குளிர், தூசின்னு இதுக்கு நடுவுலதான் படத்தையே எடுத்தாங்க. கோலார்ல ஷூட்டிங் நடக்கும்போது சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிச்சு காலை 6 மணிவரைக்கும் ஷூட்டிங் நடக்கும். கே.ஜி.எஃப் லொகேஷன் பயங்கர குளிரா இருக்கும். அதேமாதிரி, சென்னையின் ஹாட் சம்மர்லேயும் ஷூட்டிங் நடந்துச்சு. முகத்துல கல்லு, மண்ணு, தூசி எல்லாமே பட்டுக்கிட்டே இருக்கும். உடம்பு முழுக்க ரொம்ப தூசி படியும். குழந்தைங்கக்கூட இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. அதனால, இந்தப் படம், நடிச்ச எல்லோருக்குமே ரொம்ப சேலஞ்சிங்கானதுதான். குறிப்பா, டப்பிங் இல்லாம நடிக்கும்போது ஆர்டிஸ்ட் என்ன பேசுறாங்களோ அதை அப்படியே லைவ் ரெக்கார்டிங் பண்ணினாங்க. விக்ரம் சார் பேசும்போது அத்தனை ஆர்டிஸ்ட்டும் பேசாம இருக்கணும். இப்படி ஒவ்வொருத்தர் பேசும்போதும் யூனிட்டே பேசாம அமைதி காத்தோம். சின்னதா சத்தம் கேட்டாக்கூட ரீடேக் போகக்கூடிய சூழல் ஏற்பட்டுடும். ஆனா, இவ்ளோ நெருக்கடிகள் இருந்தாலும் கவலைப்படாம காட்சி சரியா வர்ற வரைக்கும் அடுத்தடுத்த டேக் போய்ட்டே இருப்பாரு இரஞ்சித் சார். அவ்ளோ கஷ்டப்பட்டதுக்குப் பாராட்டுகள், வரவேற்புகள் இப்போ கிடைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
”நடிகர் விக்ரம், இயக்குநர் பா.இரஞ்சித்கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் என்ன?”
”விக்ரம் சார்க்கிட்ட நான் பார்த்து வியந்த விஷயம் என்னன்னா ரொம்ப நாள் வாய்ப்பு தேடி, திடீர்ன்னு வாய்ப்பு கிடைச்சா அந்த முதல் படத்துல ஒருத்தர் எவ்ளோ அர்ப்பணிப்போட, ஆர்வத்தோட, எனர்ஜியோட நடிப்பாங்களோ அந்த மாதிரிதான் தங்கலான்ல நடிச்சார். இரஞ்சித் சார்க்கிட்ட எப்பவுமே உண்மை இருக்கும். அந்த உண்மையைச் சத்தமா, தைரியமா சினிமாட்டிக் எக்ஸ்பிரியன்ஸ் மூலமா காண்பிக்கிறது அவர்கிட்ட ரொம்ப பிடிக்கும். அவர்கிட்ட பிடிச்சதே அந்த எதார்த்தமும் உண்மைத்தன்மையும்தான். ஷூட்டிங் நடக்கும்போதே விக்ரம் சாரை உடனுக்குடன் பாராட்டிடுவாரு. அதேமாதிரி, எங்களையும் பாராட்டிடுவார். ’மினுக்கி மினுக்கி’ பாட்டப்போ ‘சூப்பர்ம்மா’ன்னு சொல்லி என்னைப் பாராட்டினாரு.”
”’மினுக்கி மினுக்கி’, ‘அறுவடை’ பாடல்களில் உங்களோட டான்ஸ் ரொம்பவே வரவேற்கப்பட்டதை எப்படிப் பார்க்குறீங்க?”
”முதலில் ‘அறுவடை’ சாங் ஷூட்டிங்தான் போனோம். எல்லோரையுமே காண்பிச்சிருப்பாங்க. என்னோட டயலாக் வரும்போது ‘அறுவடை’ பண்ணிக்கிட்டே பாடுற மாதிரி நடிக்கச் சொன்னாங்க. நானே யோசிச்சு பண்ணினதுதான் அந்த பெர்ஃபாமன்ஸ். அதனால சாண்டி மாஸ்டர்தான், ‘ரொம்ப நல்லா பன்றாங்க. ‘மினுக்கி மினுக்கி’ சாங்குக்கும் இவங்களையே வெச்சு பண்ணிக்கலாம்’னு ரெக்கமெண்ட் பண்ணினார். மூணு நாள் ஷூட்டிங், ஒரே நாளில் பெரும்பாலான காட்சிகளை முடிச்சிட்டாங்க. ஜி.வி.பிரகாஷ் சார்க்கும் சாண்டி மாஸ்டருக்கும் இந்த நேரத்துல தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.”
”உங்களோட குடும்பம்…”
”என்னோட சொந்த ஊர் விழுப்புரம். ஸ்கூல் எல்லாம் அங்கதான் முடிச்சேன். காலேஜ் சென்னையில முடிச்சிட்டு மாடலிங்குக்குள்ள வந்துட்டேன். விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சதால போட்டோகிராஃபி, எடிட்டிங் எல்லாமே எனக்கு வரும். டெக்னிக்கலா நான் ரொம்ப ஸ்ட்ராங். ஓவியமும் ரொம்ப நல்லா வரைவேன். படிச்சு முடிச்சதும் மும்பையில மாடலிங் பண்ணிக்கிட்டிருந்தேன். 200-க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடிச்சிருக்கேன். ’தங்கலான்’ எனக்கு மூணாவது படம். என்னோட முதல் படம் ‘கட்டுமரம்’, ரெண்டாவது படம் ‘நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’.
இப்போ, ’தங்கலான்’ படத்துல நடிச்சதால எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டிருக்கு. மிஷ்கின் சார் இயக்கத்துல ’ட்ரைன்’ படத்துல விஜய் சேதுபதி சார்கூட நடிச்சிருக்கேன். இந்த வருடக் கடைசியில அந்தப் படமும் ரிலீஸ் ஆகிடும். ரொம்ப எதிர்பார்ப்போட காத்துக்கிட்டிருக்கேன்.”
”பெண்கள் ஜாக்கெட் அணியும் காட்சி எல்லோராலும் பாராட்டப்படுதே… தோல்சீலைப் போராட்டம் பற்றி இதுக்கு முன்னால கேள்விப்பட்டிருக்கீங்களா?”
”எல்லாமே எனக்கும் தெரியும். உணவு, உடை, உறைவிடம் அடிப்படையான விஷயம். ஆனா, அந்த உடையைக்கூட அணிய முடியாம இருந்திருக்காங்க. அந்த மாதிரியான உரிமைகளைப் பேசுறது ரொம்ப முக்கியமான விஷயம். இரஞ்சித் சார், பார்வதி மேடத்துக்கு ஒரு டயலாக் வெச்சிருப்பார். ஜாக்கெட் போட்டதும் அப்படியே தூக்கி புடிச்சுக்கிட்டிருக்கிறமாதிரி இருக்குன்னு வரும். தங்களுக்கு உடை கிடைச்சதும் அந்தச் சூழலில் எப்படி ஃபீல் பன்றாங்கன்னு ரொம்ப ஆத்ரமார்த்தமா சொல்லியிருப்பார்.
மற்றபடி, ஷூட்டிங்குல எல்லோரும் ஜாக்கெட் இல்லாமதான் நடிச்சோம். ஆரம்பத்துல ஜாக்கெட் இல்லாம நடிக்கப்போறேமேன்னு யோசனை இருந்துச்சு. அந்த மக்கள் ரியலா அப்படித்தான் வாழ்ந்திருக்காங்க. உண்மைச் சம்பவத்தை காண்பிக்கும்போது அப்படித்தானே இருக்கணும்னு புரிஞ்சிக்கிட்டோம். ஷூட்டிங்ல எல்லோருமே உடலைத்தாண்டி நடிச்சோம். யாரும் எதுவும் யோசிக்கவே இல்ல. இரஞ்சித் சார் ஷூட்டிங் ஸ்பாட் செட் பயங்கர சேஃபா இருந்ததாலதான் அது சாத்தியமாச்சு!”
”இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்துல நடிச்சதுல நீங்க கத்துக்கிட்ட விஷயங்கள்னா எதைச் சொல்வீங்க?”
”நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். பாடுவேன், ஆடுவேன், நடிப்பேன் இதுதான் என் ஏரியா. இரஞ்சித் சார் படத்துல நடிச்சதால மட்டுமே இல்ல, நான் எப்பவுமே சமத்துவத்தை விரும்புறவ. சமத்துவத்தைக்கூட கேட்டு வாங்குற சூழலில்தான் இந்தச் சமூகம் இருக்கு. யாரோட உரிமையையும் தட்டிப் பறிக்கிற உரிமை யாருக்கும் கிடையாது. வர்ற தலைமுறைக்கு சமத்துவத்தைதான் நான் வலியுறுத்துறேன். அந்தச் சமத்துவத்தையும் உரிமையையும் தைரியமா வலியுறுத்துபவர் இரஞ்சித் சார்.”