திருமண மோதிரத்தைக் கூட தொலைத்திருக்கிறார் ரோகித் சர்மா – டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை சொன்ன பயிற்சியாளர்

Rohit Sharma : ரோகித் சர்மாவைப் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேட்டியளித்துள்ளார். அதில் ரோகித் சர்மாவின் டிரெஸ்ஸிங் ரூம் ரகசியங்களை எல்லாம் கூறியுள்ளார். ரோகித் சர்மா டிரெஸ்ஸிங் ரூமில் திருமண மோதிரங்களைக் கூட மறந்துவிட்டு சென்றிருக்கிறார் என்றும், ஆனால் மேட்சுக்கான வியூகங்களை ஒருபோதும் மறந்ததே இல்லை என பெருமிதமாக தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா வழக்கமாக ஐபேட், ஹெட்போன்களை எல்லாம் பலமுறை மறந்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் கேப்டனாக தான் செய்ய வேண்டிய விஷயங்களை, ஏற்கனவே திட்டமிடப்பட்ட விஷயங்களை எல்லாம் சரியாக களத்தில் அப்ளை செய்வார் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர். இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் கீழ் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். அவருடன் சேர்ந்து 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றவுடன் இந்திய அணிக்கான பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கும் விக்ரம் ரத்தோர், கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். விக்ரம் ரத்தோர் பேசும்போது, “ரோகித் சர்மா இந்திய அணிக்கு கிடைத்த நல்ல கேப்டன். அவர் போட்டிக்கு முன்பாக பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என எல்லோரிடமும் பேசுவார். பயிற்சியாளர்களிடமும் கலந்தாலோசிப்பார். 

அதன்படி போட்டிக்கான அனைத்து தயாரிப்புகளுடன் களத்திற்கு செல்வார். இதற்கு முன்பு ஒரு போட்டிக்கான வியூகங்களில் இவ்வளவு கவனம் செலுத்தும் கேப்டன்களை நான் பார்த்ததில்லை. அந்தளவுக்கு வியூகங்களுக்கு ரோகித் சர்மா முக்கியத்துவம் கொடுப்பார். அதனை சரியாக களத்தில் அப்ளை செய்வார். அதுவே அவரின் வெற்றிகளுக்கு காரணம் என நினைக்கிறேன். டிரெஸ்ஸிங் ரூமில் பலமுறை ஐபேட்கள், ஹெட்போன்களை எல்லாம் மறந்துவிட்டு சென்றிருக்கிறார் ரோகித். ஆனால் ஒருமுறைகூட போட்டிகளுக்கான வியூகங்களை அவர் மறந்ததே இல்லை. 

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கூட பும்ராவின் ஓவர்களை முன்கூட்டியே முடித்தார் ரோகித். இந்த முடிவுக்காக அவர் மீது கடும் விமர்சனங்கள் அந்த நொடியிலேயே வரத் தொடங்கியது. ஆனால் ரோகித் சர்மாவின் இந்த முடிவு தான் இறுதிப் ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தென்னாப்பிரிக்காவை தள்ளி, இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. ரோகித் இந்திய கிரிக்கெட் அணிக்கான சிறந்த கேப்டன்களில் ஒருவர்” என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.