வியக்க வைக்கிறது நாயகன் சூரியின் கதைத் தேர்வுகள். ‘விடுதலை’ படத்தின் மூலம் கதை நாயகனாக அவதாரம் எடுத்த சூரி, அடுத்து வெளியான `கருடன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து `கொட்டுக்காளி’ படமும் இந்த வாரம் வெளியாகிறது. இந்நிலையில் சூரியை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா? விமலை வைத்து விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் `விலங்கு’ வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ்தான் அடுத்து சூரியை இயக்குகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ மூலம் கதாநாயகனாக உயர்ந்தவர் சூரி. ‘கதைதான் எப்போதும் ஹீரோ’ என்ற கருத்தில் உறுதியாக இருக்கும் சூரி, தான் ஹீரோவாக நடிக்கும் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்திய ‘கருடன்’ படத்தில் ஆக்ஷனிலும் ஸ்கோர் செய்திருந்தார். அடுத்து அவரின் ‘கொட்டுக்காளி’ படமும் வெளியாகிறது. அதற்கு அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது அடுத்த படத்தை ‘விலங்கு’ வெப்சீரீஸை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விலங்கு’ வெப்சீரிஸுக்கு முன்னர் ஜி.வி.பிரகாஷை வைத்து ‘புருஸ்லீ’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார் பிரசாந்த்.
இப்போது ஹாட் ஸ்டாருக்காக விகடன் தயாரித்து வரும் ‘லிங்கம்’ வெப்சிரீஸின் கிரியேட்டிவ் இயக்குநராகவும் பிரசாந்த் பாண்டிராஜ் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து சூரியை வைத்து தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க உள்ளார்.
இது குறித்து சூரி வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள்…
“இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். அப்போதிலிருந்தே சூரிக்கும் பிரசாந்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுப்பது குறித்து நீண்ட காலமாகவே பேசி வந்தனர். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் இந்தப் படத்தில்தான் அமைந்துள்ளது. ‘கருடன்’ படத்தைத் தயாரித்த குமார், இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். சூரியைப் போலவே தயாரிப்பாளர் குமாரின் குட்புக்கில் இருந்து வருகிறார் பிரசாந்த். இந்தப் படம் ஆரம்பமானதற்கு முழுக்க முழுக்க குமார்தான் காரணம் என்கின்றனர். முழுக்க முழுக்க குடும்பக் கதை இது என்றும் சொல்கிறார்கள். சூரியை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்க்கும் படமாக இது இருக்கும். பிரசாந்திடம் படத்தின் ஒன்லைனைக் கேட்ட சூரி, ‘இப்படி ஒரு கதையைத்தான் தம்பி எதிர்பார்த்தேன்’ என வியந்து சொன்னதாகச் சொல்கிறார்கள். இப்போது கதை விவாதம் முழு வீச்சில் நடந்து வருகிறது. வரும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும்” என்று தெரிவித்தனர்.