சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது.
அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிட்செல் மார்ஷ் மற்றும் கேமரூன் க்ரீனை அதிக அளவில் பயன்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டிருப்பதாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலிய அணியில் அதிக அளவில் ஆல்ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. ஆனால், அணியில் உள்ள ஆல்ரவுண்டர்களை கடந்த சில டெஸ்ட் தொடர்களில் நாங்கள் அதிக அளவில் பயன்படுத்தவில்லை. ஆனால், இம்முறை (இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்) சற்று வித்தியாசமாக இருக்கப்போகிறது.
ஆல்ரவுண்டர்களான கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் மார்ஷை அதிக அளவில் பந்துவீச்சில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். கேமரூன் க்ரீன் ஷீல்டு கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளராக களம் இறங்கினார். ஆனால் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக அளவில் பந்துவீசியதில்லை.
இந்த முறை பந்துவீச்சில் அவரை அதிக அளவில் பயன்படுத்துவோம். கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரை சேர்த்து எங்களிடன் 6 பந்துவீச்சு வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.