கொல்கத்தா: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கையால் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் உடலின் உள்ளே 9 இடங்கள், வெளியே 16 இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுநாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதன் விவரம்:
கடந்த 9-ம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. கையால் கழுத்தை நெரித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இது கொலைதான். பாலியல் வன்கொடுமையும் நடந்ததற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் உள்ளது. பிறப்பு உறுப்பில் இருந்த 151 கிராம் திரவம் மற்றும் ரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன.
எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்தம் உறைந்துள்ளது. கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளி பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் கடுமையாக போராடி உள்ளார் என தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ துறை பேராசிரியர் அபூர்வ பிஸ்வா, இணை பேராசிரியர் ரினா தாஸ், என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரியின் தடயவியல் மருத்துவ துறை துணை பேராசிரியர் மொல்லி பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.
கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் விரல் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் ரத்த மாதிரியும் ஒன்றுபோல இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால், கொலையில் சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே, சம்பவம் நடந்த 2 நாட்களில், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் பதவி விலகினார். கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
‘‘பெண் மருத்துவர் உயிரிழந்த தகவல்அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரதுபெற்றோரை, மகளின் சடலத்தை பார்க்க 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வைத்தது ஏன்?’’ என்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். கொலை குறித்து முதலில் உங்களுக்கு தகவல்கொடுத்தது யார், சடலம் இருந்தபகுதிக்கு அருகே உள்ள அறைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டது யார் என்பன உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்: புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கதிரியக்க நிபுணர் ஹர்ஷ் மகாஜன், எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குநர் பல்ராம் பார்கவா, நரம்பியல் வல்லுநர் எம்.வி.பத்மா வஸ்தவா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட, நம் நாட்டின் தலைவர் என்ற வகையில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். இதுபோன்ற கொடூரமான செயல், மருத்துவ சேவையின் அடித்தளத்தையே ஆட்டம்காண செய்துள்ளது. பெண்கள், சிறுமிகள், சுகாதார துறையினருக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் உடனே தனி சட்டம் இயற்ற வேண்டும்.