Motivation Story: நடுக்கடல்… 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை!

`நம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் மீது நமக்கிருக்கும் நம்பிக்கைதான் புதிய சாகசங்களுக்கான தேடலுக்கு நம்மை அனுமதிக்கிறது.’ – அமெரிக்க நடிகை ஓபரா வின்ஃப்ரே

சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம் துவண்டுபோய்விடுகிறவர்கள்தான் நம்மில் பலர். சக மாணவர்களின் கேலியைப் பொறுக்க முடியாமல் கல்லூரிப் படிப்பையே பாதியில் நிறுத்திய மாணவர்களைப் பார்த்திருப்போம். உயரதிகாரியின் குடைச்சல் தாங்க முடியாமல் நல்ல வேலையை விட்ட இளைஞர்களைப் பார்த்திருப்போம். சித்ரவதை செய்யும் கணவனை எதிர்க்கத் திராணியில்லாமல் தற்கொலை முடிவைக் கையிலெடுத்த இளம்பெண்களைப் பார்த்திருப்போம். இந்தத் தவறான முடிவுகளுக்குக் காரணம், அவர்களுக்கு மனோதிடம் இல்லாததுதான். ஆங்கிலத்தில் இதை `Willpower’ என்கிறார்கள். இதைத்தான் பாரதியார் `மனதில் உறுதி வேண்டும்’ என்கிறார். மனத்துணிவு மட்டும் வாய்த்துவிட்டால், எப்பேர்ப்பட்ட இன்னலையும் எதிர்கொண்டுவிடலாம்; தடை தாண்டும் ஓட்டம்போல எந்தப் பிரச்னை வந்தாலும் தாண்டிக் குதித்து ஓடி, நம் இலக்கை அடைந்துவிடலாம்.

பிரான்ஸைச் சேர்ந்த மாலுமி லொரான் கம்ப்ருபி (Laurent Camprubi) மனோதிடம் வாய்ந்தவர். அவருக்கு ஒரு கனவு இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ரூட் டு ரம் (Route Du Rhum) போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்கிற கனவு. அது ஒரு படகுப் பந்தயம். 4,077 மைல் கடலில் ஒற்றை ஆளாகப் படகை ஓட்டிச் செல்ல வேண்டும். சூறைக்காற்று, புயல், பொங்கியெழும் அலைகள் என எது குறுக்கிட்டாலும், நிற்காமல் இலக்கை அடைய வேண்டும். பிரான்ஸிலிருக்கும் செயின்ட் போலோ துறைமுகத்தில் ஆரம்பித்து, கொடலூப் (Guadeloupe) என்கிற தீவுப்பகுதி வரை பந்தயப் படகை (Yacht) கரீபியன் கடலில் ஓட்டிச் செல்ல வேண்டும். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் கம்ப்ருபி.

அது ஜூலை 31, 1922. கம்ப்ருபிக்கு 62 வயது. ஒரு நாளைக்கு முன்பாகத்தான் போர்ச்சுக்கலின் தலைநகர் லிஸ்பனிலிருந்து தன் 39 அடி பாய்மரப் படகில் (Class 40) கிளம்பியிருந்தார். அந்தப் படகுக்கு அவர் வைத்திருந்த பெயர் ஜன்னா (Jeanne). வரும்போதே காலநிலை சரியில்லை. கிளம்பும்போதிருந்த வெயில், கொஞ்ச தூரம் படகில் வந்ததுமே காணாமல்போய், மேகமூட்டம் ஆரம்பித்திருந்தது. 12 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்த பிறகு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என முடிவெடுத்தார் கம்ப்ருபி. அன்றைக்கு அவர் ஈடுபட்டிருந்த பயிற்சி, `ரூட் டு ரம்’ அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தது. அதனால், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு முறை அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை, அவர் படகில் பொருத்தியிருந்த ஒரு கருவி மூலமாக சிக்னலாக அவர்களுக்குச் சென்று சேர்ந்துவிடும். அவர் ஓய்வெடுக்க ஆரம்பித்த அதேநேரத்தில், கடல் அலைகள் பெரும் சத்தத்துடன், ஓங்கி ஓங்கி அந்தச் சின்னஞ்சிறு படகான ஜன்னாவைத் தாக்க ஆரம்பித்திருந்தன. ஆறு முதல் பத்தடி உயரத்துக்கு எழுந்த அலைகள், அவரை பயமுறுத்தின. படகின் மேல் தளத்திலிருந்த கம்ப்ருபி, தூங்குவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்.

ஆக்ரோஷமாக ஓங்கிப் படகின்மேல் அடித்தது ஓர் அலை. படகு மெல்ல ஒருபக்கமாக சாய ஆரம்பித்திருந்தது. என்ன நடக்கப்போகிறது என்பது அவருக்குப் புரிந்துபோனது. அவருடைய செல்லப் படகான ஜன்னா கவிழ ஆரம்பித்தது.

`ஒரு முயற்சியைத் தொடர்ந்து செய்வதில் உங்கள் மன உறுதியை இழக்கும்போதுதான் தோல்வி ஏற்படும்.’ – அமெரிக்க எழுத்தாளர் லிண்ட்சே ரீச் (Lindsey Rietzsch).

கம்ப்ருபிக்கு 20 வயதிலிருந்தே `ரூட் டு ரம்’ போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது லட்சியம். அதை அவர் `தி எவரெஸ்ட் ஆஃப் செய்லிங்’ என்று குறிப்பிடுகிறார். போர்ச்சுக்கலில் ஒரு காலணி நிறுவனத்தில் வடிவமைப்பாளராக வேலை. அவருடைய வாழ்க்கைத்துணை வர்ஜீனியா பிலிப்பும், அவருடைய இரண்டு குழந்தைகளும் பிரான்ஸிலிருக்கும் மார்செய்லி (Marseille) நகரத்தில் இருக்கிறார்கள். அன்றைக்கு அவர் மேற்கொண்டது ஒரு சோதனை ஓட்டம். அவருடைய விடாமுயற்சி, மனத்துணிவு, பலம் ஆகியவற்றைச் சரிபார்க்கும் ஒரு டெஸ்ட் அது. கம்ப்ரூபி, வாழ்நாளெல்லாம் ஓட்டத்திலும் சைக்கிளிங் செல்வதிலும் நேரத்தைச் செலவிட்டவர். கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்து தன் உடல் தசைகளையும் நரம்புகளையும் வலுவாக்கி வைத்திருப்பவர். ஆனால், அன்றைக்கு அவருக்கு நடந்தது மிகப்பெரும் சோதனை.

Northern Lights

தலைகீழாகக் கவிழ்ந்திருந்தது படகு. அதில் அவருடைய சிறு அறை. நல்ல வேளையாக சுவாசிக்க உதவும் `ஏர் பப்பிள்’ (Air Bubble) இயங்கிக்கொண்டிருந்தது. அதன் உதவியுடன் மூச்சுவிட்டுக்கொண்டு, உதவிக்கு யாராவது வர மாட்டார்களா என்று காத்துக்கொண்டிருந்தார் கம்ப்ருபி. `நான் நிச்சயம் சாக மாட்டேன். எனக்கு என் வாழ்க்கை வேண்டும். என் மனைவி, குழந்தைகளைத் திரும்பவும் பார்ப்பேன். அவர்களுடன் பல காலம் வாழ்வேன்’ என்கிற நம்பிக்கை வார்த்தைகளைச் சொன்னபடி, மூழ்கிக்கிடந்த படகுக்கு அடியில் மூச்சுவிட்டுக்கொண்டு உதவிக்காகக் காத்துக்கொண்டிருந்தார் அவர்.

அவருடைய மூக்குக்கண்ணாடி உடைந்துபோயிருந்தது. தான் ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை வெளி உலகுக்குத் தெரிவித்தே ஆக வேண்டும். கடல்நீரில் மூழ்கிய அந்தப் படகிலிருந்த கம்ப்யூட்டரும், பிற எலெக்ட்ரானிக் கருவிகளும் பழுதடைந்திருந்தன. திரும்பத் திரும்ப என்னென்னவோ செய்து பார்த்து அவற்றை செயல்பட முயன்றுகொண்டிருந்தார் கம்ப்ருபி.ஒருவழியாக அவருடைய அவசர செயலி செயல்பட ஆரம்பித்தது. அன்று இரவு 8:23 மணிக்கு அவர் ஆபத்தில் இருக்கிறார் என்கிற தகவல் அருகிலிருந்த ஸ்பெயின் கடலோர காவல் படைக்குக் கிடைத்தது.

`மனிதனின் விருப்பம் என்பது அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதானே தவிர வேறில்லை.’ – ஜெர்மன் தத்துவவியலாளர் ஃபிரெடெரிக் சில்லர் (Friedrich Schiller).

சுற்றிலும் இருட்டு. உடலைச் சில்லிடவைக்கும் கடல்நீர். பசி. உணவு இருக்கட்டும். தாகத்துக்குத் தண்ணீர் குடிக்கக்கூட வழியில்லை. உதவிக்கு யாருமில்லை. கவிழ்ந்த படகுக்கு அடியில் அந்த 62 வயது மனிதர் கம்ப்ருபி. வேறு யாராக இருந்தாலும் சில மணி நேரத்திலேயே சோர்ந்துபோயிருப்பார்கள். இப்படிக் கிடப்பதைவிட உயிரைவிடுவது மேல் என நினைத்திருப்பார்கள். மிக மிகக் குறைவான சுவாசக் கருவியின் உதவியுடன் கம்ப்ருபி பிழைத்துக்கிடந்தது கிட்டத்தட்ட 16 மணி நேரம். ஹெலிகாப்டர் வந்தது. ஸ்பெயின் கடலோரக் காவல் படையும் படகை எடுத்துக்கொண்டு ஓடி வந்தது. கம்ப்ருபியின் படகு கவிழ்ந்துகிடந்த இடத்தை முதலில் அடையாளம் கண்டார்கள். அந்தப் படகை கடலோர காவல் படை நெருங்கியது. என்ன செய்யலாம் என யோசித்தது.

“ஹலோ… ஹலோ… நாங்க பேசுறது கேக்குதா?’’ என ஒலிபெருக்கியில் சத்தம் கொடுத்தார்கள். சுதாரித்துக்கொண்ட கம்ப்ருபி, “நான் இங்கே இருக்கேன்… படகுக்கு அடியில… காப்பாத்துங்க… காப்பாத்துங்க…’’ என்று குரல் கொடுத்தார். ஆக, ஒரு மனிதர் படகுக்கு அடியில் உயிருடன் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டது ஸ்பெயின் கடலோர காவல் படை. “பயப்படாதீங்க… உங்களை நிச்சயம் காப்பாத்துவோம்’’ என்று உத்தரவாதம் கொடுத்தார் அந்தப் படையின் தலைவர். ஆனால், உடனே செயலில் இறங்க சூழல் சாதகமாக இல்லை. கடல் கரடுமுரடாக இருந்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும். இரவு நேரம் வேறு.. அந்தக் கால நிலையில் கடலில் இறங்கினால், காப்பாற்றப் போகிறவர்களுக்கேகூட ஆபத்து நேரலாம். அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார் கடலோர காவல் படையின் தலைவர்.

பிறகு ஒரு முடிவெடுத்தார்கள். படகு மேலும் கடலுக்குள் மூழ்கிவிடாமல் இருக்க, மிக பிரமாண்டமான பலூன்களை அந்தப் படகில் கட்டிவைத்தார்கள் . அன்றைய திங்கள்கிழமை இரவு கடலிலேயே கழித்தார் கம்ப்ருபி. அடுத்த நாள் காலையில்தான் அவர் ஸ்பெயின் கடலோர காவல் படையால் காப்பாற்றப்பட்டார். உடனடியாக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கைப்பட்டார். உயிரைத் தக்கவைத்துக்கொள்ள அவருக்கு உதவியாக இருந்தது அவருடைய மனோதிடம். தன்னைக் காப்பாற்றியவர்களிடம் கம்ப்ருபி இப்படிச் சொன்னார்… “தேங்க் யூ… தேங்க் யூ… தேங்க் யூ… எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் இனி நான் வாழ வேண்டும்!’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.