புதுடெல்லி: சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் தினம் நாடெங்கும் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு நேற்று வந்த பள்ளி மாணவ, மாணவிகள் அவரது கையில் ராக்கிக் கயிறு கட்டினர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலரும், பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
முன்னதாக பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத் தில் கூறும்போது, ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக் ஷா பந்தன் நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனிதமான நாளில், உங்கள் அனைவரின் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சகோதரி: கடந்த 30 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு, கமார் என்ற பெண் ஷேக் ரக் ஷா பந்தன் தினத்தில் ராக்கி கயிறுகளை அனுப்பி வருகிறார். கமார் ஷேக், ராக்கி கயிறு அனுப்பிய நாள் முதல் அவரை தனது பாகிஸ்தான் சகோதரியாகக் கருதி பாராட்டி வருகிறார் பிரதமர் மோடி.
இந்நிலையில் நேற்று, பிரதமர் மோடிக்கு கமார் ஷேக் சிறப்பு ராக்கி கயிறை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கமார் ஷேக் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடிக்காக, எனது கையால் ராக்கி கயிறை தயார் செய்வேன். ராக்கி கயிறுகளை கடைகளில் வாங்கி அவருக்கு எப்போதும் அனுப்பியதில்லை. அவரது கைகளில் ராக்கி கயிறைஎன்னுடைய கைகளால் கட்டுவதையே நான் விரும்புகிறேன்.
தற்போது 30-வது ஆண்டாக ராக்கி கயிறை அனுப்பியுள்ளேன். இது சிறப்பு ராக்கி கயிறாக அமைந்துள்ளது. இதை வெல்வெட்டால் தயாரித்துள்ளேன். இதில் முத்துக்கள், எம்பிராய்டரி அமைத்து தயாரித்துள்ளேன்” என்றார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை அவர் நேரில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2023-ல் அவர் நேரடியாக டெல்லி வந்து பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறை கட்டினார்.
பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் பிறந்த கமார் ஷேக், 1981-ம் ஆண்டு மோஷின் ஷேக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் அவர் இந்தியாவில் குடியேறி வசித்து வருகிறார்.
முதன்முதலாக 1990-ம் ஆண்டில் பிரதமர் மோடியை, அப்போது குஜராத் மாநில ஆளுநராக இருந்த டாக்டர் ஸ்வரூப் சிங் மூலமாக சந்தித்தார். அப்போது ஸ்வரூப் சிங்கின் விருப்பத்தின்படி, கமார் ஷேக்கை சகோதரியாக ஏற்றுக்கொண்டார் மோடி. அப்போது முதல் அவர், பிரதமர் மோடிக்கு தொடர்ந்து ராக்கி கயிறை கட்டி வருகிறார். முதன்முதலாக நரேந்திர மோடியை, கமார் ஷேக் சந்தித்தபோது அவர் முதல்வர் பதவியில் இல்லை. பின்னர் குஜராத் மாநில முதல்வர், பிரதமர் பதவிகளில் மோடி அமர்ந்தபோதும் கமார் ஷேக்கின் பாசம் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.