மகாராஷ்டிரா அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் மராத்தா இன மக்களுக்கு சட்டப்படி இடஒதுக்கீடு இல்லாமல் இருக்கிறது. வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மராத்தா இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இட ஒதுக்கீடு வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு இன்னும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. புதிதாக கடந்த இரு ஆண்டுகளாக மராத்தா இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜராங்கே என்பவர் போராட்டம் நடத்தி வருகிறார். அவரின் போராட்டம் காரணமாகத்தான் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கணிசமான இடங்களில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. மனோஜ் ஜராங்கே தற்போது மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி இட ஒதுக்கீடு தொடர்பாக பேசி வருகிறார்.
ஜல்னாவில் மனோஜ் ஜராங்கே அளித்த பேட்டியில், ”முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க தயாராக இருக்கிறார். ஆனால் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதற்கு தடையாக இருக்கிறார். பட்னாவிஸ்தான் இட ஒதுக்கீடு கொடுக்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார். ஆனால் இக்குற்றச்சாட்டை தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் தேவையான நடவடிக்கை எடுக்கலாம். இட ஒதுக்கீட்டிற்கு நான் இடையூறாக இருப்பதாக முதல்வர் ஒப்புக்கொண்டால் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு விலகத்தயாராக இருக்கிறேன்.
நான் முதல்வராக இருந்த போது மராத்தா சமூகத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். இப்போது அவற்றை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்கிறார். நான் அவருக்கு துணையாக இருக்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள மனோஜ் ஜராங்கே, “மராத்தா சமூகத்திற்கு எதிராக செயல்பட்டதால், ஓய்வு குறித்து பேச வேண்டிய நிலைக்கு பட்னாவிஸ் தள்ளப்பட்டுள்ளார். நான் அரசியல் ரீதியாக பேசவில்லை. ஆனால் பட்னாவிஸ் தான் இட ஒதுக்கீட்டை நிறுத்திவிட்டார். அவர்தான் அதனை தெளிவுபடுத்தவேண்டும்” என்றார்.
ஜராங்கேயின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ”துணை முதல்வர் பட்னாவிஸ் தான் இட ஒதுக்கீட்டை நிறுத்துவதாக கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை. மராத்தா இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையில் தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர்தான் மராத்தா இன மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று சொன்னார். இட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய பங்கு வகித்தார். எனவே பட்னாவிஸ் மராத்தா இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை. மராத்தா சமுதாய மக்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டால் மற்ற சமுதாய மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்” என்றும் விளக்கம் அளித்தார்.
மனோஜ் ஜராங்கேயின் குற்றச்சாட்டை நியாயப்படுத்திய மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே, `காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து ரானே கமிஷன் அமைத்து அதன் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கமான ஒருவர்தான் கோர்ட்டில் மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு அரசு வழக்கறிஞராக செயல்பட்ட கும்பகோனி ஒரு முறை அளித்திருந்த பேட்டியில் மராத்தா சமுதாயத்திற்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகவேண்டாம் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்ததாக குறிப்பிட்டார்’ என்றும் நானா பட்டோலே குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88