இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் `வாழை’. அவரின் தயாரிப்பு நிறுவனமான `Navvi Studios’-யின் முதல் திரைப்படம் இது.
இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்காணவிருக்கிறது. இந்நிலையில் நேற்று ‘வாழை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் ராம், அமீர், வெற்றிமாறன், நெல்சன், மிஷ்கின், மடோன் அஸ்வின், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியிருந்தனர்
இவ்விழாவில் ‘வாழை’ திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “என்னுடைய அடுத்த படம் சிறந்த திரைப்படமாகப் பண்ணுவதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்பேன். ஆனால், என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது ‘வாழை’ தான். என்னுடைய வலியை, என்னுடைய பரிதவிப்பை, என்னுடைய அழுகையை கலையாக மாற்றக் கற்றுக் கொடுத்தவர் ராம் சார். என்னை வளர்த்தெடுத்த ராம் சாருக்கு, ‘இதுதான் என் படைப்பு’ என்று நான் அர்ப்பணிக்கும் திரைப்படம் இது. ‘என்னதான் இவனுக்கு பிரச்சனை, ஏன் இப்படி பேசிக்கொண்டே இருக்கிறான்’ என்று நினைப்பவர்களுக்கு ‘நானே என்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று எடுத்த படம்தான் இது” என்று பேசியிருக்கிறார்.