ஆக.31-ல் கேரளாவின் பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டு ஒருங்கிணைப்புக் கூட்டம்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்த ஆண்டு கேரளாவின் பாலக்காட்டில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை 3 நாட்கள் நடைபெறும் என்று அந்த அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுனில் அம்பேத்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ்-ன் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்த ஆண்டு கேரளாவின் பாலக்காட்டில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2, 2024 வரை நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் பொதுவாக வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இது மகாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் ஆல் ஈர்க்கப்பட்ட அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் அழைப்பின்படி பங்கேற்கின்றனர். இந்த அனைத்து அமைப்புகளும் சமூக மாற்றத்திற்கான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை பல்வேறு துறைகளில் ஜனநாயக வழிமுறைப்படி மேற்கொண்டு வருகின்றன.

இந்த சந்திப்பின் போது, ஆர்எஸ்எஸ் ஆல் ஈர்க்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள் தங்களின் பணி குறித்த தகவல்களையும், அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வார்கள். இந்தக் கூட்டத்தில், தற்போதைய சூழ்நிலையில் தேசிய நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள், சமீபத்திய முக்கிய நிகழ்வுகள் மற்றும் சமூக மாற்றத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து திட்டமிடுவது குறித்து விவாதிக்கப்படும். பல்வேறு விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த அமைப்புகள் அனைத்தும் பேசும்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, அனைத்து ஆறு இணை பொதுச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். ராஷ்டிர சேவிகா சமிதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பாரதிய ஜனதா கட்சி, பாரதிய கிசான் சங்கம், வித்யா பாரதி, பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட 32 அமைப்புகளின் தேசியத் தலைவர்கள், அமைப்புச் செயலாளர்கள் முக்கியப் பொறுப்பாளர்களுடன் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.