திருநெல்வேலி: “பாஜகவுக்கு ஆதரவாக இந்துக்களின் வாக்கு வங்கி மாறிவிடுமோ என்ற அச்சத்தில் திமுக இப்போது முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் முடிந்த திட்டங்களுக்கான அறிக்கைகள் அரசால் முறையாக சமர்ப்பிக்கப்படாததால் நிதி வழங்கப்படாமல் உள்ளது. அறிக்கைகள் அளித்தால் உடனடியாக நிதி வழங்கப்படும்,” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
பாளையங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மத்திய இணையமைச்சர் முருகன் இன்று (ஆக.20) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில் ஒண்டிவீரனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டு அவரை மத்திய அரசு பெருமைப்படுத்தியது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த ஆண்டு முழுவதும் சுதந்திரத்துக்காக பாடுபட்டு போற்றப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை மத்திய அரசு கவுரவித்தது,” என்றார்.
திமுகவும் பாஜகவும் இணக்கம் காட்டுகிறதா என்ற கேள்விக்கு, “ஒரு நிகழ்ச்சியை வைத்து அதுபோன்று தீர்மானிக்க முடியாது. மாநில அரசின் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்து கொண்டார். அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதை அரசியலாக பார்க்க கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ. 11 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆளுநர் ஆண்டுதோறும் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம்தான். திமுகவினர் இந்த ஆண்டு கலந்து கொண்டுள்ளனர்.
கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்கள் வேல் யாத்திரையை நடத்தினோம். அதற்கு முருக பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பாஜகவுக்கு ஆதரவாக இந்துக்களின் வாக்கு வங்கி மாறிவிடுமோ என்ற அச்சத்தில் திமுக இப்போது முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது. மெட்ரோ ரயில் தொடர்பான பயன்பாட்டு அறிக்கை, தணிக்கை அறிக்கை போன்றவை தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை. அந்த அறிக்கைகளை அளித்தால் உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி வழங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் விவகாரத்தில் மாநில அரசால் நடவடிக்கை எடுக்க முடியாததாலேயே இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தால் 6 மணி நேரத்துக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணி வலுமையான கூட்டணியாக உள்ளது. திமுகவின் உதவி தேவையில்லை என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டப் பேரவை குழு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.