அவரை பற்றி மட்டுமே சிந்திப்பவர்… டிரம்ப்பை கடுமையாக சாடிய ஹிலாரி கிளிண்டன்

நியூயார்க்,

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இதனை காண்பதற்காக அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்படுகிறார். இதேபோன்று, துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மின்னசோட்டா கவர்னர் டிம் வால்சும் முறைப்படி வேட்பாளராக இந்த மாநாட்டில் அறிவிக்கப்படுவார்.

அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து கடந்த மாதம் விலகிய அதிபர் ஜோ பைடன் இந்த மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர்களான பாரக் ஒபாமா மற்றும் பில் கிளிண்டன் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டு பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை மந்திரியான ஹிலாரி கிளிண்டன் மாநாட்டில் பேசும்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை புகழ்ந்து பேசினார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஜனநாயகத்தின் சாம்பியன் பைடன் என்றார்.

வெள்ளை மாளிகைக்கு மீண்டும் கண்ணியம் வந்துசேர பாடுபட்டவர் மற்றும் உண்மையான தேசப்பற்று என்றால் என்ன? என வெளிப்படுத்தியவர் என்று அவருக்கு தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.

குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப், தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பவர் என ஹிலாரி கடுமையாக சாடினார். கமலா ஹாரிசை இரக்கமற்ற முறையில் கிண்டல் செய்ததற்காகவும் அவரை ஹிலாரி கடிந்து கொண்டார். கமலா ஹாரிசுக்கு எப்போதும் எங்களுடைய ஆதரவு உண்டு என்றும் ஹிலாரி கிளிண்டன் பேசியுள்ளார்.

கமலாவை விட நான் அழகாக இருக்கிறேன் என டிரம்ப் முன்பு பேசும்போது குறிப்பிட்டதுடன், அவரை முட்டாளுடன் ஒப்பிட்டு கேலி செய்தும் பேசினார்.

தொடர்ந்து ஹிலாரி கூறும்போது, எங்களுக்கு கமலா ஒரு போராளி. கடுமையாக உழைக்கும் குடும்பத்தினருக்காக, விலைவாசியை குறைப்பதற்காக அவர் போராடுவார். நல்ல சம்பளம் அளிக்கும் வேலைவாய்ப்பை பரவலாக உருவாக்க அவர் பாடுபடுவார்.

நாடு முழுவதும் கருக்கலைப்பு உரிமைகளை மீண்டும் கொண்டு வருவார் என்றும் ஹிலாரி பேசியுள்ளார். டொனால்டு டிரம்ப், அவருடைய சொந்த வழக்கு விசாரணையிலேயே, தொடர்ந்து படுத்தே கிடப்பவர். அவர் எழுந்தபோது அவருக்கான சொந்த வரலாற்றை உருவாக்கினார்.

அதிபர் தேர்தலுக்கான போட்டியில் 34 கொடிய குற்றங்களை புரிந்ததற்காக கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்ளும் ஒரு நபர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது என்பது இதுவே முதன்முறையாகும் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

அமெரிக்காவின் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை நாங்கள் எழுதி வருகிறோம் என கூறிய அவர், நம்மை முன்னெடுத்து செல்லும் பண்பு, அனுபவம் மற்றும் தொலைநோக்கு பார்வை ஆகியவை கமலா ஹாரிசுக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி தோல்வியை தழுவினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.