புதுடெல்லி,
கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி ஒரு வினோதமான தீர்ப்பை வழங்கியது. பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜால் பயூன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரை காதலித்திருக்கிறார். ஆகையால் அந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்தும் அந்த இளைஞரை விடுதலை செய்கிறோம். நாட்டின் இளம் பெண்கள், 2 நிமிட இன்பத்துக்கு இடம் தந்துவிடக் கூடாது. இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சிகளைக் தூண்டுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் தம்முடைய கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம். இளம் பெண்கள் பாலியல் உணர்வுகள் தூண்டுதலுக்குள்ளாகி தோற்றுவிடக் கூடாது என அறிவுரை வழங்கி இருந்தனர்.
கொல்கத்தா ஐகோர்ட்டின் இந்த அறிவுரைகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறின. கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு தொடர்பாக சுப்ரீம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும் கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க மாநில அரசும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.
வாதங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், ‘இந்த விவகாரத்தில் இளம் வயது பெண்கள் பாலியல் தூண்டுதலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னதாக வழங்கிய உத்தரவு மற்றும் வழக்கில் விடுவிக்கப்பட்ட நபரின் தண்டனைக்கு தடை என்ற அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் அனைத்தும் மிகப்பெரிய ஆட்சேபனைக்கு உரியவை என்பது மட்டுமில்லாமல், பொருத்தமற்றவை ஆகும். ஒரு கோர்ட்டு இதுபோன்ற சர்ச்சைக்குரிய தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க கூடாது. குறிப்பாக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு தவறான உதாரணமாக அமைந்துள்ளது. நீதிபதிகளாக இருக்கும் நபர்கள் எவ்வாறு இதுபோன்று கருத்துக்களை, அதுவும் உத்தரவின் அடிப்படையில் தெரிவிக்கின்றனர் என்பது புரியவில்லை’ என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவினால், இந்த வழக்கின் குற்றவாளிக்கு மீண்டும் தண்டனை உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.