Latest Cricket News Updates: ஐபிஎல் 2025 தொடரில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணிகளில் இருந்தும் முக்கிய வீரர்கள் சிதறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. பலமிக்க அணியாக பார்க்கப்படும் பல அணிகள் பலமிழக்கலாம் அல்லது மேலும் பலமாகலாம், பலமற்ற அணிகள் வீழ்த்த முடியாத அணியாக உருவெடுக்கலாம். இந்த அத்தனைக்குமான விடை அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில்தான் தெரியும் என்றாலும் அதற்கான தொடக்க புள்ளி என்பது கூடிய விரைவில் நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில்தான்…
ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் நடைபெறும். மெகா ஏலத்தின் விதிகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள், மெகா ஏலத்தின் தேதிகள், மெகா ஏலம் நடைபெறும் இடம் ஆகியவை செப்டம்பர் முதலிரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் பெரிய மாற்றம் வருமா?
அவை அறிவிக்கப்பட்ட உடனேயே எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை மெகா ஏலத்தை முன்னிட்டு தக்கவைக்கப்போகின்றன, அவற்றில் இந்தியர்கள் எத்தனை பேர், இந்திய அணியில் விளையாடாத இந்திய வீரர்கள் எத்தனை பேர், வெளிநாட்டு வீரர்கள் எத்தனை பேர், யார் யார் என்னென்ன தொகைக்கு தக்கவைக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் தெரியவரும்.
அந்த வகையில், பலரும் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றம் ஒன்றும் இருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட Impact Player விதி தொடருமா அல்லது நீக்கப்படுமா அல்லது அதில் மாற்றங்கள் ஏதும் வருமா என்பதுதான். Impact Player விதியினால்தான் ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக அதிக ஸ்கோர்கள் அடிக்கப்படுகிறது என்றும் இந்த விதி ஆல்-ரவுண்டர்கள் உருவாவதை தடுக்கிறது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அஸ்வின் – Pdogg விவாதம்
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருக்கும் ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தனது யூ-ட்யூப் சேனலில் Impact Player விதி இருக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நேரலை கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். இதில், அஸ்வினோடு பிரபல கிரிக்கெட் வல்லுநரும், பயிற்சியாளருமான பிரசன்னாவும் (Pdogg) பங்கேற்றார்.
பிரசன்னா முன்வைத்த விமர்சனம்
இதில் பிரசன்னா Impact Player விதியின் கீழ் 12 வீரர்கள் விளையாடுவது ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் இது கிரிக்கெட்டின் அடிப்படையே மாற்றுகிறது என்றும் கருத்து தெரிவித்தார். இந்த விதியை நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இதில் சிறிது மாற்றமாவது கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்தார். அதாவது ஒரு பேட்டர், பேட்டிங்கின் போது களமிறங்காவிட்டால், அவருக்கு பதில் பந்துவீச்சின் போது கூடுதல் பந்துவீச்சாளரை களமிறக்கிக்கொள்ளலாம் என்ற அளவிலாவது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் இதன்மூலம் 11 வீரர்களே போட்டியில் விளையாடியிருப்பார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
அடித்து நொறுக்கிய அஸ்வின்
ஆனால், இதனை முற்றிலும் மறுத்த அஸ்வின் Impact Player விதிக்கு ஆதரவாக பேசினார். அதில் பேசியவை சுருக்கமாக இதோ,”ஆல்-ரவுண்டர்களை தடுக்கிறது என்பது ஏற்க முடியாது. இந்த விதி இல்லாத போதிலும் ஆல்-ரவுண்டர்களின் வரத்து என்பது இந்திய அணியில் குறைவாகவே இருந்தது. தற்போது பேட்டர்கள் பந்துவீசி பயிற்சி எடுக்கிறார்கள். ஜெய்ஸ்வால் 10 மணிநேரம் பேட்டிங் பயிற்சி எடுத்தால், ஒருமணிநேரம் பந்துவீச்சுக்கும் பயிற்சி எடுக்கிறார், ரியான் பராக்கும் அப்படிதான். எனவே, இந்த விதி ஆல்-ரவுண்டர்கள் உருவாவதை தடுக்கிறது என்பதை ஏற்க முடியாது” என்றார்.
ஏன் வேண்டும் Impact Player விதி?
தொடர்ந்து பேசிய அவர்,”டி20 போட்டிகள் என்பது கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் இல்லை. மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் டி20. புது புது முயற்சிகளை டி20 போட்டிகளில்தான் செய்ய முடியும். எனவே, அப்படி வரும் புது புது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவது சரியல்லா. ஒலிம்பிக்கில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே டி20 போட்டி, The Hundred தொடர் ஆகியவை விளையாடப்பட்டு வருகிறது.
அப்படியிருக்க, பேட்டர்கள் ரன்கள் குவிப்பது ரசிகர்களை அதிகம் ஈர்க்கிறது, போட்டியை சுவாரஸ்யமாக்குகிறது. எனவே, Impact Player விதியை தடுப்பது தவறு. 90 நிமிடங்கள் விளையாடப்படும் ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் Substitute வீரர்களுக்கு அனுமதி இருக்கிறது, அதுவே ஏன் கிரிக்கெட்டுக்கு கூடாது” என பிரசன்னாவை நோக்கி கேள்வி எழுப்பினார்.
விதியில் மாற்றம் வேண்டும் – அஸ்வின்
மேலும் Impact Player விதியில் மற்றொரு மாற்றம் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் எனவும் அஸ்வின் பேசியிருந்தார். “மொத்தமாக போட்டிக்கு ஒரு Impact வீரர் வருவது என்றில்லாமல், பேட்டிங்கிற்கு ஒருவர் பந்துவீச்சுக்கு ஒருவர் என மொத்தம் 13 வீரர்கள் விளையாட வழிவகை செய்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார். அஸ்வினின் கருத்தை ஏற்றுக்கொண்டாலும், ‘கிரிக்கெட் தூய்மைவாதியாக’ (Cricket Purist) இம்பாக்ட் வீரர் விதியை வேண்டாம் என்றே சொல்வேன் என பிரசன்னா தனது இறுதிக் கருத்தை முன்வைத்தார். இதை வாசித்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்… Impact Player விதி இருக்கலாமா, வேண்டாமா அல்லது அதில் மாற்றம் ஏதும் கொண்டு வர வேண்டும்…?