குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய தயார் நிலையில் இருக்க வேண்டும்: வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: குரங்கு அம்மை பாதிப்பை பொது சுகாதார அவசர நிலையாக ஐ.நா. அறிவித்துள்ளதையடுத்து வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகங்கள் (விஆர்டிஎல்) தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதையடுத்து உலக சுகாதார அமைப்பு ஆகஸ்ட்14-ல் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இது உலகின் பல்வேறு நாடுகளில் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை அவை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில்தான், இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைக்கப்பட்ட விஆர்டிஎல் ஆய்வகங்கள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் குரங்கு அம்மை பாதி்ப்பை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மதிப்பீடு செய்வதற்கான உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. அப்போது, குரங்கு அம்மை பாதிப்பை விரைவாக கண்டறிவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும், கண்காணிப்பை அதிகப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

பிரதமர் கண்காணிப்பு: நிலைமையை பிரதமர் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி அந்தவகையான நோய் பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், குரங்கு அம்மை தொடர்பான அறிகுறிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புக்கு சரியான நேரத்தில் அதுகுறித்து தகவல் தெரிவிக்க சுகாதார அதிகாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மிஸ்ரா இந்த கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட விஆர்டிஎல் ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 32 ஆய்வகங்களில் குரங்கு அம்மை வைரஸை கண்டறிவதற்கான வசதிகள் உள்ளன. குரங்கு அம்மை பாதிப்பு கடைசியாக 2024 மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.