புதுடெல்லி: முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த திருமணமான ஆண்கள், ஒரே நேரத்தில் 3 முறை தலாக் (இன்ஸ்டன்ட் முத்தலாக்) எனக் கூறி தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடனடி முத்தலாக் நடைமுறையை 2017-ம் ஆண்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும் இது தொடர்பாக சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பின்படி, முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்டத்தை (2019) மத்தியஅரசு இயற்றியது. இது முத்தலாக்தடை சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன்படி, முத்தலாக் கூறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமியத்துல் உலமா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், “முத்தலாக் தடை சட்டம் சட்டவிரோதமானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பன உள்ளிட்ட இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது: உடனடி முத்தலாக் நடைமுறை திருமண கட்டமைப்புக்கு மிகவும்ஆபத்தானது. குறிப்பாக திருமணமான முஸ்லிம் பெண்களின் நிலைபரிதாபகரமானதாக இருந்தது. எனவேதான் உடனடி முத்தலாக் நடைமுறையை தடுக்க உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது.
முத்தலாக் தடை சட்டம் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை எந்தவிதத்திலும் மீறவில்லை. திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தில், நாடாளுமன்றத்தில் நீண்டவிவாதத்துக்குப் பிறகே இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் தலையிடவோ அல்லது சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவோ முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த காலங்களில் கூறியிருக்கிறது. நாட்டு மக்களுக்கு எது நல்லது, எது நல்லது அல்லஎன்பதை தீர்மானிப்பது நாடாளுமன்றத்தின் பணி. தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட நாடாளுமன்றத்துக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.