“பாஜகவின் ‘மாமன் – மச்சான்’ கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்” – அண்ணாமலை 

பல்லடம்: “பாஜகவின் மாமன் – மச்சான் கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பல்லடம் அருள்புரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மக்கள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் கிளையை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஆக.20) திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து பல்லடம் அருகே நாதகவுண்டன்பாளையத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.என்.எஸ்.பழனிச்சாமி நினைவு மண்டபத்துக்கு வந்து அண்ணாமலை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். தற்போது அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது விவசாயிகளுக்கான வெற்றி. பாஜக அணில் போல் வேலை செய்துள்ளோம். அத்திக்கடவு – அவிநாசி 2-வது திட்டத்தை துவங்க வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டம் மற்றும் பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தையும் கொண்டுவர அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை மரக்கன்றுகளை நட்டுவைத்தார்

பெருமாநல்லுரில் போராட்டத்தின் போது உயிர் நீத்த 3 விவசாயிகளுக்கு பாஜக சார்பில் மணி மண்டபம் கட்டுவோம். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா மாநில அரசு நடத்திய விழா ஆகும். மத்திய அரசு சார்பில் அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை. ஒருவரது காலில் விழுவது தான் தவறு. முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி. உதயகுமார் சசிகலா முன்பு எவ்வாறு நிற்பார் என்பது அனைவருக்கும் தெரியும். பன்முகத் திறன் கொண்ட கருணாநிதியை கும்பிட்டதில் எந்த தவறும் இல்லை. திமுகவை எதிர்க்கிற ஒரே அரசியல் கட்சி பாஜக தான். அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும்போது அவருடன் கருணாநிதிக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தவே நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் நான் தரகர் என பழனிசாமி கூறுகிறார். கள்ள உறவு என்று கொச்சையான வார்த்தையை தெரிவித்துள்ளார். ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி போன்று, அவரது பேச்சு இல்லை. பாஜக கூட்டணி மாமன், மச்சான் கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுக, திமுக பாஜக பங்காளிகள் தான். எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை. எங்கள் தலைமையில் மாமன் – மச்சான் கூட்டணி வேற்றுமையில் ஒற்றுமையாகும். நடிகர் விஜயும் மாமன் – மச்சான் தான். அவர் மாமன் – மச்சான் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம்,” என்று அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் மாநில விவசாய அணி செயலாளர் ஜி.கே.நாகராஜ், மற்றும் பலர் பங்கேற்றனர்.அருள்புரத்தில் மக்கள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தினை திறந்து வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.