புதுடெல்லி: தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் மீண்டும் தள்ளிவைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஏற்கெனவே தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் உள்ள சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெறும் நோக்கில், நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள், ‘‘இந்த முறைகேடு தொடர்பாக அனைத்து வழக்குகள் மீதும் அமலாக்கத் துறை விசாரணை நடத்துகிறதா? இந்த வழக்குகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்களா? அல்லது செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தை மட்டும் அமலாக்கத் துறை கையாளப்போகிறதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றனர்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் பல பிரிவுகள் உள்ளன. செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் என்றாலும், ஆளுங்கட்சியில் செல்வாக்கு மிக்க நபராகவே உள்ளார். இந்த வழக்கின் சாட்சியங்களை அவர் சிதைக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கின் முக்கிய குற்றப்பத்திரிகை குறித்து விசாரிக்க உள்ளோம். இதுதொடர்பான விளக்கத்தையும் ஆவணமாக தாக்கல் செய்துள்ளோம்’’ என்றார்.
அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, ‘‘அவர்கள் நினைப்பதுபோல இந்த வழக்குகளை தனித்தனியாக பிரித்து விசாரிக்க முடியாது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை மீண்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.