Doctor Vikatan: பேரீச்சம் பழம் சாப்பிட்டால் இரும்புச்சத்து கூடுமா?

Doctor Vikatan: என் வயது 38. எனக்குப் பல வருடங்களாக ரத்தச்சோகை எனப்படும் அனீமியா பாதிப்பு இருக்கிறது. நான் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுவதால், இரும்புச்சத்துள்ள உணவுகளைத் தேடித்தேடி சாப்பிடுவது சாத்தியமாவதில்லை. அதனால் தினமும் சுமார் 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிடுகிறேன். ஆனாலும், எனக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவே இல்லை. என்னுடைய இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை  மருத்துவர் அருணா.

ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.

உங்களுடைய ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்கிறது என்ற தகவல் இல்லை. முதலில் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து அந்த அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்.  ஹீமோகுளோபினின் முக்கிய வேலையே ரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வது என்பதால், அதன் அளவு 5 அல்லது அதற்கும் கீழ் குறைந்தால் இதயத்துக்குச் செல்லும் ஆக்ஸிஜனும் குறையும். நடந்தால் மூச்சு வாங்குவது, மாடிப்படிகளில் ஏறி இறங்க முடியாதது, நெஞ்சு படபடப்பது, முகம் மற்றும் கால்கள் வீக்கம் போன்றவை ஏற்படும். இதை அவசர நிலையாகக் கருதி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

ஹீமோகுளோபின் அளவு  குறைவதையே அனீமியா அல்லது ரத்தச்சோகை என்கிறோம். ஆண்களுக்கு  ஹீமோகுளோபின் அளவானது 14 முதல் 17.5 கிராம் ( (gm/dL), பெண்களுக்கு 12 முதல் 15 கிராம் ( (gm/dL)  வரையிலும் இருப்பதுதான் நார்மல் லெவல். இந்த அளவு குறையும் நிலை அனீமியாவாக கருதப்படும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடுகூட ரத்தச்சோகையை ஏற்படுத்தலாம். இயல்பாகவே நம் உணவில் இரும்புச்சத்து குறைவு. 

இரும்புச்சத்து அதிகமிருப்பதாகச் சொல்லப்படும் பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகமிருக்கும். அந்த நார்ச்சத்தானது இரும்புச்சத்தை உடல் உட்கிரகிப்பதைத் தடுக்கும்.  எனவே,  பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து இருந்தாலும்  ரத்தச்சோகைக்கான மாத்திரைகளுக்கு பதில் இதை மட்டுமே எடுத்துக்கொள்வதாக நீங்கள் சொல்வது சரியானதாக இருக்காது. உண்மையில் சிவப்பு இறைச்சியில் மட்டும்தான் நார்ச்சத்து இல்லாத இரும்புச்சத்து கிடைக்கும். 

ரத்தச்சோகை

மேற்கத்திய நாடுகளில் ரத்தச்சோகை பாதிப்பு இல்லாததற்கு காரணமே அவர்களது அசைவ உணவுப்பழக்கம்தான்.  தவிர அவர்கள் உட்கொள்ளும் காலை உணவு தொடங்கி பலவற்றிலும் செறிவூட்டப்பட்ட இரும்புச்சத்து இருக்கும்.  இந்தியாவை பொறுத்தவரை பலரும் வாரத்தில் ஒருநாள் மட்டுமே அசைவம்   சாப்பிடுகிறார்கள். அதனால்தான் இங்கே ரத்தச்சோகை பாதிப்பும்  அதிகம்.  செறிவூட்டப்பட்ட அரிசியில் (Fortified rice) வடித்த சாதத்தைத் தொடர்ந்து சாப்பிடும்போது இரும்புச்சத்துக்காக தனியே மாத்திரை தேவைப்படாது. 

வைட்டமின் பி 12 குறைபாட்டால் வரும் `மெகலோபிளாஸ்டிக் அனீமியா’ (Megaloblastic anemia (MA) பிரச்னை, ரத்தச்சோகையை மட்டுமன்றி, நரம்பு பாதிப்பையும் ஏற்படுத்தும். கை, கால்களை மரத்துப்போகச் செய்யும். வைட்டமின் பி 12 சத்தானது அசைவ உணவுகளில் அதிகம் இருக்கும். சைவ உணவுக்காரர்கள், அதை ஈடுகட்ட மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.